பிரசவ வேதனை Phoenix, Arizona, USA 65-01-24 1. நாம் தலைகுனிந்து ஜெபிப்போமாக. பிரியமுள்ள தேவனே, இன்று எங்கள் மத்தியில் உம்முடைய பிரசன்னமானது அபரிமிதமாக ஏற்கனவே பொழிந்தருளப்பட்டுக் கொண்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இத்தகைய பிரசன்னம் இன்று மதியம் பரிபூரணமாக பொழியப்பட எதிர்ப் பார்க்கிறோம். சற்று நேரத்திற்கு முன்பு அந்த கிறிஸ்தவ பெண்மணி பாடின மகத்தான அப்பாடலுக்காகவும், உம்முடைய ஆவி கீழிறங்கி வந்து எங்களுக்குக் கொடுத்த வியாக்கியானத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, அது அவ்விதமேயாகட்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இத்தகைய காரியம் நடைபெறும் பொழுது எங்களுடைய இருதயங்கள் சந்தோஷத்தினால் நிறைவதாக. பிரியமுள்ள தேவனே, இந்த மதியான வேளையில் உம்மை சந்திக்க ஆயத்தமற்றவர்களாக இங்கு யாராகிலும் இருப்பின், மறுபிறப்பின் மூலம் உம்மண்டை அவர்கள் சேருவதற்காக இந்த மணி நேரத்தில் தங்களுடைய முடிவான தீர்மானத்தை எடுக்கட்டும். கர்த்தாவே, அதிக நாட்களாக இந்த பிரயாணப் பாதையிலே காணப்படும் எங்கெளெல்லாரையும் ஆசீர்வதியும். உம்முடைய வார்த்தையினால் புதிய காரியங்களை எங்களுக்கு போதியும். கர்த்தாவே, உம்முடைய ஆவியினாலே சரியான புரிந்துக் கொள்ளுதலை எங்களுக்குத் தாரும் ஒன்றான மெய் வியாக்கியானியான நீரே இங்கு வந்து உம்முடைய வார்த்தையை வியாக்கியானப்படுத்தும். இன்றைக்கு இவைகளை எங்களுக்கு அருளிச் செய்யுமாறு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். (யாரோ ஒருவர் சபையாரின் மத்தியிலிருந்து தேவ செய்தியினை அளிக்கிறார்.) 2 அது போதுமானது. (யாரோ ஒருவர் மேடையினின்று சகோ. பிரன்ஹாமுடன் பேசுகிறார்). நன்றி, எத்தகைய நேரமுண்டாயிருக்கிறது! அபிஷேகத்தை நாம் உணர்கின்றதான இந்த இடம் பரலோகத்திற் கொப்பாயிருக்கின்றது. இத்தகைய நல்ல இடத்தில் தங்கியிருப்பதைக் காட்டிலும் வேறு என்ன வேண்டுமென்பது எனக்குத் தெரியவில்லை, கிறிஸ்துவோடு கூட உன்னதங்களில் வாசமாயிருப்பதென்பது எவ்வளவு நல்ல காரியம் பாருங்கள். சகோதரி ஃப்ளாரன்சை தேவன் ஆசீர்வதிப்பாராக. துக்கமானதும், இருள் சூழ்ந்ததுமான ஒரு காலத்தினூடாக அவள் சென்றுக் கொண்டிருக்கின்றாள். அவளுடைய தகப்பனார் சிறிது நாட்களுக்கு முன்புதான் இறந்து போனார். ''தேவன், அந்த பிள்ளையை ஆசீர்வதியும்'' என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. சகோ. டீமாஸ், இக்கூட்டங்களின் பொறுப்பை தமது இரண்டு தோள்களின் மேலும் சுமந்து கொண்டிருக்கிறார். உங்களுடைய ஜெபங்கள் அவருக்கும் தேவையாயிருக்கின்றது. சகோ. ஷகரியானை தேவன் ஆசீர்வதிப்பாராக. சகோ. கார்ல் வில்லியம்ஸ் அவர்களே, உங்களோடும் இந்த அருமையான சகோதரர்களோடும் இக்கூட்டத்தில் நானிருப்பதற்காக களிகூருகிறேன். இங்கு அநேக சகோதரர்களை சந்திக்க நான் சிலாக்கியம் பெற்றேன். என்னைப் பொறுத்தமட்டில் இக்கூட்டத்தின் கடைசி பாகம் இதுதான் என்று அறிந்திருக்கிறேன். ஆகவே, இந்த அருமையான சகோதரர்கள் சிலரோடு நான் அந்த நல்ல நாட்டில் நித்தியத்தைக் கழிக்க எதிர்பார்க்கிறதினால், இப்பொழுதும் இங்கு அவர்களோடு நான் கைகளைக் குலுக்கி வந்தனம் செய்ய எதிர்பார்த்திருக்கிறேன். 3 நான் இப்பொழுது ஒரு காரியத்தைக் கூறும்பொழுது நீங்கள் என்னை தவறாகப் புரிந்துக் கொள்ளமாட்டீர்களென்று நம்புகிறேன். நேற்றைய தினம் டேனி ஹென்றி (Danny Henry) என்னும் என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு ஒரு வெகுமதியைக் கொடுத்தார். அந்த வெகுமதி ஒரு தெய்வ செயலானது என்று நான் கருதுகிறேன். ஒரு சமயம் நான் கலிபோர்னியாவிலுள்ள கிறிஸ்தவ வியாபாரிகளின் கூட்டத்தில் இக்காலத்தின் நிலைமையைக் குறித்து மிகவும் கடுமையாக பிரசங்கித்து கொண்டிருந்தேன். எல்லாரும் அதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன் என் இருதயத்தில் எந்த விதமான தீமை எண்ணம் நான் கொண்டிருக்கவில்லை. அது அவ்வாறாக இல்லை. இல்லவே இல்லை.அந்த விதமாக நான் கூறவிழையவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக புரிந்து கொள்வீர்கள். ஆனால் நான் கூறவேண்டுமென்று என்று என்னிடம் என்ன வருகின்றதோ அதை நான் கூறித்தானாக வேண்டும். அந்த வெகுமதியைத் தந்த என் நண்பர் ஒரு பாப்டிஸ்டு சபையை சேர்ந்தவராயிருந்தார். இவர் ஒரு சினிமா நடிகருடைய உறவினர் என்று நான் நினைக்கிறேன். அன்று இவர் அந்த மேடையின் மேல் வந்து தன்னுடைய கரங்களால் என்னைத் தழுவிக் கொண்டு, “சகோ. பிரன்ஹாமே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஒரு சில வார்த்தைகளால் ஜெபிக்க விரும்புகிறேன்'' என்று கூறி அவர் பிரெஞ்சு பாஷையில் பேச தொடங்கிவிட்டார். ஆனால் அந்த வாலிபனோ பிரெஞ்சு பாஷையில் ஒரு வார்த்தையும் அறியாதவராயிருந்தார். அச்சமயத்தில் லூயிசியானாவை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு எழுந்து நின்று, ”அது பிரெஞ்சுமொழி!'' என்று கூறினாள். அதே சமயத்தில் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு மனிதனும் அன்று நின்று கொண்டு, “அது பிரெஞ்சு மொழி” என்று கூறினார். இந்த இருவரும் அங்கு பேசப்பட்ட பிரெஞ்சு மொழியின் பொருளை எழுதிக் கொண்டுவந்தார்கள். அந்த மூலப்பிரதியை இங்கு என்னிடம் வைத்துள்ளேன். இது இவ்விதமாய் நடந்து கொண்டிருக்கையில் ஒரு வாலிய மனிதன் அங்கு நடந்து வந்து மற்ற இருவருடைய பிரதிகளையும் பார்க்க விருப்பங் கொண்டார். இந்த மனிதன் ஐக்கிய நாடுகளின் சபையில் பிரெஞ்சு மொழிக்கு மொழிப்பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டவராயிருந்தார். ''சரியாக அது பிரெஞ்சுமொழி'' என்றார். 4 நான் அந்த மொழி பெயர்ப்பை வாசிக்க விருப்பமாயுள்ளேன். அவர்களில் ஒருவருடைய மூலப்பிரதியினின்று நான் இப்பொழுது படிக்கப் போகிறேன். இதை மொழிப்பெயர்த்த அந்த மனிதனுடைய பெயரை என்னால் சரியாக உச்சரிக்க இயலவில்லை. அந்தபெயர் இவ்விதமாயுள்ளது. விக்டர் லீ ட்யூ (Victor Ledeaux). இவர் ஒரு சரியான பிரெஞ்சுக்காரராயிருந்தார். இப்பொழுது, மொழிப் பெயர்க்கப்பட்ட அந்த வாசகத்தை நான் படிக்கிறேன்: “இடுக்கமானபாதையும், கடினமான பாதையும் நீ தெரிந்து கொண்டாய்; உன்னுடைய சொந்த தெரிந்துக் கொள்ளுதலின் படி நீ அதில் நடந்தாய்; சரியானதும், துல்லியமானதுமான தீர்மானத்தை நீ தெரிந்துக் கொண்டாய்; அது என்னுடைய வழியாயிருக்கிறது; இந்த பெருஞ் சிறப்பு வாய்ந்த உன் தீர்மானத்தின் காரணமாக, பரலோகத்தின் பெரும் பகுதி உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. என்னே ஓர் மகிமையான தீர்மானத்தை நீ செய்தாய்! இத்தீர்மானமே, தெய்விக அன்பின் மகத்தான வெற்றியைத் தந்து அதை நிறைவேற்றப் போகிறதாயிருக்கிறது என்று பறைசாற்றுகிறது'' ஜனங்கள் அந்நிய பாஷைகளைப் பேசுவதை நான் முதன்முதலாக கேட்டபொழுது அதைக் குறித்து பரிகசித்ததில்லை. மாறாக அதைக் குறித்து அதிசயித்தேன். ஆனால் தத்ரூபமான ஒரு சம்பவத்தை நான் கண்டு, அதன் பின்னணியில் எத்தைைகயதோர் கட்டளை அமைந்திருந்தது என்பதை அறிந்துக் கொண்ட பொழுது அது தேவனிடத்திலிருந்து வந்தது என்பதை தெரிந்து கொண்டேன். 5 இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த சகோதரன் தான் (இவர் ஒரு பிரபலமான வழக்கறிஞர்) டேனி எனக்களித்த வெகுமதியை என்னிடம் சமர்ப்பித்தவர். சகோ. டேனி பரிசுத்த நகரத்திற்கு சென்றிருந்தார். அங்கே, இயேசு தம் மரணத்திற்கு பின்பு கிடத்தப்பட்ட கல்லறையில் டேனி படுத்துக் கொண்டபொழுது என்னை நினைவு கூர்ந்தாராம். அப்பொழுது அவர் மேல் கர்த்தருடைய ஆவியானவர் வந்ததினால், அவர் இயேசுவின் சிலுவை மரணம் ஏற்பட்ட இடமான கல்வாரிமலைக்குச் சென்று, அங்கிருந்த ஓர் சிறு கல்லை உடைத்து எடுத்து வந்து, அக்கல்லை இரண்டு மணிக்கட்டு சட்டை இணைப்பு பொத்தான்களாக (Cuff links) செய்துவிட்டார். அந்த வெகுமதியை மதிப்பிற்குரிய ஒரு பொருளாக நான் கருதுகிறேன். இன்று காலை நான் ஜெபத்திலிருக்கும் போது, தற்செயலாக அந்த இரண்டு பொத்தான்களையும் பார்க்க நேரிட்டது. நீங்கள் அவைகளை கவனிப்பீர்களானால், அவை ஒவ்வொன்றிலும் இரத்தம் தோய்ந்ததான ஒரு நேர் கோட்டை காணலாம். டேனிக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அந்த செய்தியிலும் இடுக்கமான பாதை குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த பொத்தான்களில் காணப்படும் கோடுகளுக்கு எவ்வளவு சரியாக பொருத்தமாயிருக்கிறது! இதை ஒருவேளை டேனி அறியாமலிருக்கலாம். இந்த வெகுமதியை நான் ஒரு தெய்வ செயலாகவே கருதி டேனிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன். சகோதரனே, நான் இந்த வெகுமதியை வெகுவாக மெச்சுகிறேன் என்பதை டேனிக்குத் தெரியப்படுத்திவிடுங்கள். இதில் இன்னொரு ஆச்சரியமானக் காரியம் என்னவென்றால், அன்று காலை நான் அணிந்து வந்த சட்டைகளில் பொத்தான்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. என் மனைவி என்னை நோக்கி, ''உங்கள் முன்னங்கை சட்டை இணைப்பு பொத்தான்களை நான் கொண்டு வர மறத்துவிட்டேன்“ என்று கூறினாள். இருந்தாலும் கர்த்தர் டேனியின் வெகுமதியின் மூலம் என்னுடைய தேவையை சந்தித்தார். 6 ஓ, இது ஒரு மகிமையான ஜீவியமில்லையா, சகோதரர்களே? (சபையார் ''ஆமென்'' என்கிறார்கள் - ஆசி) இந்த சுவிசேஷம் எளிமையானதாயிருந்தாலும் அதில் நடப்பதென்பது ஒரு மகத்தான காரியமென்று நான் அறிந்திருக்கிறேன். இதற்கு நிகர் வேறொன்றுமில்லை என்று நானறிந்திருக்கிறேன். கர்த்தருடைய கிருபையினால் இந்த எளிமையாக்கப்பட்ட சுவிசேஷத்தில் நான் பங்குபெற சிலாக்கியம் பெற்றேன். 7 இந்த மதிய நேரத்தில் உங்களுடைய நேரத்தை நான் அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனெனில் இன்றிரவு நீங்கள் சபைகளுக்கு செல்வீர்களென்று இங்கு விருந்தினர்களாக வந்திருக்கும் நீங்கள், இங்கு மேடையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஊழியக்காரர்களின் இரவு நேர ஆராதனையில் பங்கு பெறுவீர்களானால், உங்களை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நலமானதை உங்களுக்குச் செய்வார்கள். இன்று காலை நகரத்திலுள்ள சில ஞாயிறு போதனைப் பள்ளிக்கு நீங்கள் சென்றிருப்பீர்களென்பதில் சந்தேகமொன்றுமில்லை. நாம் இத்தகைய கூட்டங்களை (இது வியாபாரிகளுக்கென்ற முழு சுவிசேஷக் கூட்டங்களாயிருக்கிறது) இங்கு நடத்திக் கொண்டிருக்கையில், உங்களுடைய முழு ஆதரவையும் நம்முடைய சபைகளுக்கு தர வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அங்குதான் நம்முடைய வியாபாரிகள் செல்கிறார்கள். அது தேவனுடைய வீடாயிருக்கின்றது. அவர்களுடைய சில சபைகளுக்கு நீங்கள் செல்வீர்களென்று நான் நம்புகிறேன். நாளை இரவு இக்கூட்டம் நிறைவு பெறும் என்று நான் நம்புகிறேன். நாளை இரவு பேசப் போகிறவர் யாரென்பதையும் அவர்கள் அறிவித்துவிட்டார்களென்று நான் ஊகிக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இங்கிருக்கிறபடியினால் அவருடைய செய்தியை கேட்பேன். உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. 8 நான் என்னை ஒரு பிரசங்கியென்று உரிமை பாராட்டுகிறதில்லை. ஏனெனில் அத்தகைய நிலைமைக்கு போதுமான கல்வியறிவு என்னிடத்திலில்லை. ஒரு பிரசங்கியென்றால், அவன் ஒரு சில பட்டங்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்று ஜனங்கள் கருதுகின்றார்கள். ஆனால் இந்த சிறிய கவணும் கல்லும் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை. வியாதியுடன் ஆடுகளை தேடி கண்டு பிடிக்க முயற்சி செய்து அவைகளை பிதாவின் மேய்ச்சலுக்கு திரும்ப கொண்டு வருவதே என் ஊழியமாயிருக்கிறது. நான் தவறுகள் செய்வேனென்றால் என்னை மன்னியுங்கள். நான் ஒரு வேத சாஸ்திரியல்ல. வேத சாஸ்திரத்தை நான் பரிகசிப்பதில்லை; அவைகள் தவறு என்று நான் கூறவில்லை. அவைகள் நமக்கு தேவைதான், ஆனால் அவைகளிலுள்ள நிலைமைகளில் நாம் சிக்கிக் கொள்கிறதையே நான் சில சமயங்களில் குற்றம் பிடிக்கிறேன். அத்தகைய என்னுடைய காரியம் எந்த ஒரு தனி மனிதனையும் சம்பந்தப்படுத்துகிறதில்லை. அது ஒரு செய்தியாகவே அமைந்திருக்கிறது. அத்தகைய செய்தியை நான் கொடுக்காமலிருக்க விரும்புகிறேன். ஏனெனில் உங்கள் உள்ளங்கள் எவ்வளவாய் நொறுக்கப்படும் என்ற காரியம் என்னை வெகுவாய் கிழித்தெறிந்துவிடுகிறது. உங்களுடைய சிறு பிள்ளைகளை குறித்தக் காரியம் என்ன? சில சமயங்களில் அவர்களை நீங்கள் திட்டவோ, கடிந்துக் கொள்ளவோ உள்ள நிலைமைகளைப் போலத்தான் என்னுடையக் காரியமும், நானும் கூட ஒரு தகப்பன் தான்; கடிந்துக் கொள்ளுதல் என்றால் என்னவென்பது எனக்குத் தெரியும். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நான் நம்புகிறேன். 9 நீங்கள் இவ்விதமாக செய்ய நான் விரும்புகிறேன். இந்த மதிய வேளையில் நீங்கள் உட்கார்ந்திருக்கையில் நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கப் போகிறேன். இங்கே ஒரு சிறிய சுருக்கமான சிறு குறிப்புகளை வைத்திக்கிறேன். நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியபடி, நான் இப்பொதெல்லாம் வசனங்களை குறித்து வைத்துக் கொள்கிறேன். ஆனால் நான் வாலிபனாயிருந்தபோது ஏறத்தாழ இந்த வேதாகமம் முழுவதும் எனக்கு மனப்பாடமாக இருந்தது. அநேக யுத்தக் களங்களினூடாக நான் சென்றுவிட்டு இப்பொழுது மிகவும் வயதானவனாகக் காணப்படுவதினால் என்னுடைய ஞாபக சக்தி சற்று குறைந்திருக்கிறது. இந்த மதிய நேரத்தில், உங்கள் இருதயங்களை திறந்து, நான் எதை தோண்டியெடுக்கப் போகிறேன் என்பதைக் குறித்து புரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன். விசேஷமாக இந்த பட்டணத்திலுள்ள பல்வேறு போதகர்களாகிய நீங்கள் இதைக் கூர்ந்து கவனிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நான் உங்களிடம் ஒரு உபகாரத்தை கேட்க விரும்புகிறேன். அதன் காரியமாக நீங்கள் என்ன செய்யவேண்டுமென்பதையும் நான் கூறப் போகிறேன். எனக்குப் பிரியமான ஒரு பழத்தையோ அல்லது கோழி இறைச்சியையோ நான் சாப்பிடும் பொழுது, பழத்தினுடைய விதை பாகத்திற்கு நான் வரும் போது, பழம் சாப்பிடுவதை நிறுத்திவிடாமல் அந்த விதையை தூர எறிந்துவிட்டு பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். அதே போன்று இறைச்சியின் எலும்பு பாகத்திற்கு நான் வரும் பொழுது, எலும்பை தூர எறிந்துவிட்டு தொடர்ந்து இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். அவ்விதமாகவே நீங்களும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கு ஒவ்வாத காரியம் ஏதாகிலும் நான் கூறுவேனென்றால் அதை தூர எறிந்துவிடுங்கள். ஆனால் உண்மையாகவே கவனித்திருந்து, அது எலும்புதானா (சபையார் சிரிக்கின்றனர் - ஆசி) என்று இப்பொழுது நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் ஒரு காரியத்தையும் நான் கூறுகிறேன். அதாவது நான் கூறப்போவது ஒரு விதையாயிருப்பின், அது புதியதொரு ஜீவனை கொண்டு வரும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆகவே முழு முயற்சியுடன் கவனியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 10 நேற்றிரவு சகோ. கார்ல் வில்லியம்ஸ், வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதைக் குறித்துப் பேசினார். அது மிகவும் நல்லக் காரியம் என்று நான் அறிவேன். ஆனால் அதை நாம் இப்பொழுது செய்ய தீர்மானிக்கவில்லை. இத்தகைய கூட்டங்களில், சகோதரன் ஓரல் மற்றும் சில சகோதர்கள் ஜெப வரிசையை எப்பொழுதாகிலும் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்பதைக் குறித்து நானறியேன். ஆனால் இத்தகைய பெரிய ஜனக் கூட்டங்களில் வழக்கமாக ஜெப் அட்டைகளை கொடுப்போம். ஏனெனில் ஜனங்கள் ஒருவரையொருவர் தள்ளி, மோதுதை அது தவிர்த்துவிடும். ஆனால் இந்த இடம் ஒரு அரங்கமாயிராமல் தேவனுடைய ஆலயமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். ஆகவே பில்லி என்னிடம் வந்து, “ஜனங்கள் ஜெப அட்டைகளை கேட்பதால், நான் அங்கு சென்று அவைகளைக் கொடுத்துவிடட்டுமா?'' என்று கேட்டான். அதற்கு நான், ''வேண்டாம் பில்லி, பரிசுத்த ஆவியானவர் எதை செய்ய சித்தமாயிருக்கிறோரோ அதற்கு ஒப்புவித்து விடுவோம். ஒருவேளை தேவன் ஜனங்களை விசுவாசத்தில் ஊன்றக் கட்டுவார். அப்பொழுது அவர்கள் இருக்குமிடத்திலேயே சுகமாக்கப்படுவார்கள்'' என்று கூறினேன். தெய்வீக சுகமளித்தலென்பது, சுவிசேஷத்தில் ஒரு சிறிய பாகமே. சிறிய பாகத்தினால் நீங்கள் ஒருபோதும் பெரிய பாகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை பலரும் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய சமூகத்தை ஜனங்கள் விசுவாசிக்க தெய்வீக சுகமளித்தலானது ஒரு சிறிய தூண்டில் முள்ளைப் போன்றிருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் தேவனுடைய சமூகத்தை உணர்ந்து விசுவாசத்தினால் சுகமாக்கப்படுகிறார்கள். 11 நான் இப்பொழுது புதிய ஏற்பாட்டிலிருந்து தேவனுடைய வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன். அதிக நேரம் நான் உங்களை இங்கு தங்க வைக்கப் போவதில்லை. என்னைக் குறித்து உங்களுக்கு சரியாக தெளிவுபடுத்திவிட்டேன் என்று நான் நம்புகிறேன். ஆகவே உங்களுடைய கவனத்தை சற்று நேரம் இங்கு செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் இதை செய்யும் முன்பு நம்முடைய தலைகளை சற்று ஜெபத்திற்காக வணங்குவோமாக. ஒரு காரியம் உங்களுக்குத் தெரியுமா? நாம் அதிகமாகப் பாடலாம். நம்முடைய தொண்டைகள் கரகரத்துப் போகும் வரை நாம் கூச்சலுமிடலாம். தவறான நேரத்தில் நாம் பாடவோ அல்லது கூச்சலிடவோ கூடும். ஆனால் நாம் ஜெபம் செய்யும் பொழுது மட்டும் நம்முடைய ஒழுங்கிலிருந்து ஒருபோதும் தவற முடியாது. ''அன்றியும் புருஷர்கள் கோபமும் தகர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளையுர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன்''. 12 பிதாவே, மானிடர்களாகிய நாங்கள் கண்களை மூடி, இருதயங்களைத் திறந்து, உம்மிடம் பேச மகத்தான சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். நீர் எங்களுக்கு செவி கொடுக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கும்பொழுது நீர் எங்களோடு உறவாடுகிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் இயேசுவானவர், ''நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்'' என்று கூறியிருக்கிறார். நாங்கள் சந்தேகப்படாமல் விசுவாசிப்பதற்கு அது நிபந்தனைகளாயிருக்கின்றது. ஆகவே பிதாவே, இந்த மதிய நேரத்தில் எங்களுடைய விண்ணப்பங்கள், ஒரு சந்தேகத்தின் நிழலுக்கும் இடமில்லாமல் பதிலளிக்கப்பட நாங்கள் விசுவாசிக்க உதவி செய்யும். கர்த்தாவே, எங்களுடைய சத்தத்தின் கீழ் இங்கேயும், உலக முழுவதிலும் இழந்து போனதும், வழி தப்பிப் போனதுமான ஆத்துமாக்களை உம்முடைய ராஜ்ஜியத்திற்கு நாங்கள் கொண்டு வருகையில் இன்று உம்முடைய மகத்தான நாமம் மகிமைப்படுவதாக. பரலோகப் பிதாவே, இன்று எங்கள் மத்தியில் ஒரு பலவீனனும் காணப்படவேண்டாம் என்று நான் ஜெபிக்கிறேன். இந்த ஆராதனை முடியும் போது, இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், பிள்ளைகளின் இருதயங்கள் சந்தோஷத்தினால் நிரப்பப்படவும், வியாதியுள்ள ஒவ்வொரு சரீரங்கள் சுகமாக்கப்படவும், கிருபையருளும். தேவனே, நீர் எங்களுக்குச் செவி கொடுப்பீர் என்று நாங்கள் விசுவாசிக்கின்ற காரணத்தினால் இயேசுவின் நாமத்தினால் இவைகளை கேட்டுக் கொள்கிறோம், எங்கள் தேவனாகிய பிதாவே, ஆமென். 13 பரி. யோவானின் சுவிசேஷம் 17-ம் அதிகாரத்தில் 20-ம் வசனத்திலிருந்து வாசித்து அதினின்று நான் பிரசங்கிக்கவிருக்கும் பொருளைக் கூற விரும்புகிறேன். ''நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுறேன்; அவர்களெல்லோரும்... நான் தவறான பாகத்தை எடுத்துப் படிக்கிறேன் என்று நம்புகிறேன். தயவு செய்து சற்று என்னை மன்னியுங்கள். ''ஸ்திரீயானவளுக்குப் பிரசவ காலம் வந்திருக்கும்போது, அவள் துக்கமடைகிறாள்'' என்று இயேசு கூறின வார்த்தையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். சகோ. ஜாக் அவர்களே, அந்த வசனம் லூக்காவிலா, அல்லது யோவானிலா, எதிலிருக்கிறது? அது யோவான் எழுதின சுவிசேஷம் 16ம் அதிகாரத்திலிருக்கிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அது அங்கு காணப்படவில்லையே (மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர், “யோவான் 16'' என்று கூறுகிறார்). உண்மை ஐயா. அது யோவான் 16:21-ம் வசனத்தில் தான் உள்ளது. அவர்களெல்லோரும்...'' 14 இல்லை, சகோ. ஜாக் அவர்களே, அது இன்னுமாய் தவறாயிருக்கிறது. ஓ, நான் 16-ம் அதிகாரம் 21-ம் வசனத்தையல்லவோ எடுத்திருக்கிறேன். ஆனால் அது தவறாயிருக்கிறதே! இது என்ன குழப்பம். ஆம், ஐயா. நான் இங்கு எடுத்து வந்திருக்கும் இந்த புது வேதாகமப் புத்தகத்தில் அதைத் தவறாக அச்சடித்திருக்கிறார்கள். அது தான் சரியான உண்மை. (ஒரு கத்தோலிக்க போதகர் அங்கு பிரசங்க பீடத்தினிடம் வந்து, தன்னுடைய வேதாகமத்தை, சகோ. பிரன்ஹாமிற்கு கொடுத்து “இது தேவனால் ஏற்பட்ட காரியம்...?... இது ஏன் இவ்விதமாக சம்பவித்தது என்பதை தேவன் உமக்குக் காண்பித்து அதை வெளிப்படுத்துவார். இது அற்புதமாயிருக்கின்றது'' என்று கூறிகிறார்.) நன்றி ஐயா. மிகவும் நன்றி. இப்பொழுது யோவான் 16:21-ம் வசனங்களை வாசிப்போம். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஸ்திரீயானவளுக்குப் பிரசவ காலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்''. (யோவான் 16:21). சகோதரனே, உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் உதவியை நான் பாராட்டுகிறேன். அந்த வேதாகமத்தில் பக்கமானது தவறாக அச்சிடப்பட்டுள்ளது. என்னுடைய பழைய வேதாகமத்தைப் பார்த்து நான் அந்த வசனத்தைக் குறித்து வைத்திருந்தேன். ஆனால், இங்கு வரும்பொழுது இந்த புதிய வேதாகமத்தை நான் கொண்டு வந்தேன். (இன்று இந்த புதிய வேதாகமத்தை எனது மனைவி கிறிஸ்துமஸ் வெகுமதியாக எனக்குத் தந்தாள்). 15 இப்பொழுது இந்த மதிய நேரத்தில் நான், ''பிரசவ வேதனை'' என்ற தலைப்பின் கீழ் பேச விருப்பமாயுள்ளேன். இத்தகைய தலைப்பு கேட்பதற்கு சற்று ஒரு விதமாயிருந்தாலும், அது வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு, ''நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்'' என்று கூறினார். கிறிஸ்தவத்தின் பிறப்பு சம்பவிக்கப் போகிறதென்பதை இயேசு அறிந்தவராய் தம்முடைய சீஷரைப் பார்த்து இந்த வார்த்தைகளைக் கூறினார். புதிய ஒன்று பிறப்பதற்காக பழையது மரிக்க வேண்டியதாயுள்ளது. பிறப்பை சம்பவிக்கச் செய்யும் எந்த ஒன்றும் துன்பத்தையடைய வேண்டியதாயிருக்கிறது. நியாயப் பிரமாணத்தினின்று கிருபையின் பிரமாணத்தைப் பெற அவர்கள் துன்பத்தினூடாகவும், வேதனையினூடாகவும் செல்ல வேண்டியவர்களாயிருந்தனர். இயற்கையான பிறப்பு ஆவிக்குரிய பிறப்பிற்கு உதாரணமாயுள்ளது. இயற்கையில் சம்பவிக்கும் எல்லாக் காரியங்களும் ஆவிக்குரியவைகளுக்கு உதாரணமாயிருக்கின்றது. பூமியின் மேல் வளரும் ஒரு மரமானது தன்னுடைய ஜீவனை காப்பதற்காக போராடுகிறதை நாம் காணும் போது, எங்கோ ஓர் இடத்தில் மரமானது மரியாமலிருக்கும் நிலைமையை நமக்கு வலியுறுத்துகிறதாயிருக்கிறது. ஏனெனில் அந்த நிலைமைக்காக அது கதறியழுகின்றது. அதே விதமாகவே, ஜனங்கள் வயதானவர்களாகவோ, வியாதியுள்ளவர்களாகவோ இருந்து ஜீவிப்பதற்காக போராடி கதறியழுவதை நாம் காணும் போது, எங்கோ ஓர் இடத்தில் நாம் நித்திய நித்தியமாக வாழப் போவதை அது வலியுறுத்துகிறதாயிருக்கின்றது. இது எவ்வளவு பரிபூரணமாயுள்ளது என்பதை கவனியுங்கள். 16 இப்பொழுது 1:யோவான் 5:7-ம் வசனங்களை வாசிப்போம் (அது அந்த வசனங்கள் தாம் என்று நான் நம்புகிறேன்) பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், முதல் மூன்றும் ஒனறு ஆக உள்ளது இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்றும் பூமிக்குரியதாயும், ஒன்றில் இணங்குகிறதாயும் உள்ளது. (ஆங்கில வேதாகமத்தில் “There are the three that bear record in heaven, the Father, the Word, the Holy Ghost; and these three are one. And there are three that bear witness in earth, the spirit, and the water and the blood: and these three agree in one” என்ற விதமாயுள்ளது.) கீழ்கோடிட்டுக் காட்டிருப்பதை கவனிப்பீர்களானால், முதல் மூன்று ஒருமைத்துவமாயுள்ளதாகவும், இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று காணலாம். தமிழ் வேதாகமத்தில், இந்த இரண்டாம் பாகத்தை, “இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது'' (வசனம் 8) என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) பிதா இல்லாமல் குமாரனையும், குமாரனில்லாமல் பரிசுத்த ஆவியையும் நீங்கள் அடைந்து கொள்ள முடியாது. ஆனால் இரத்தமில்லாமல் ஜலத்தையும், ஆவியில்லாமல் இரத்தத்தையும் நீங்கள் அடைந்து கொள்ள இயலும். நம்முடைய சபை காலங்களினூடாக இக்காரியம் நிரூபணமான ஒன்று என்று நான் கருதுகிறேன். ஜலம், இரத்தம், ஆவி நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற விதமாய் இயற்கையாக பிறப்பினின்று எதிர்மறையான உதாரணமாயிருக்கிறது. கவனியுங்கள், ஒரு பெண்மணியோ அல்லது வேறெதுவோ பிரசவ வேதனைப்படும் போது முதலாவது வெளிப்படும் காரியம் ஜலமாகும். (சுகமான பிரவசத்தில் இரண்டாவது இரத்தமும் பின்பு ஜீவனுமாயிருக்கின்றது. ஜலமும், இரத்தமும் ஆவியும் இயற்கையான சுகப் பிறப்பை நிலைப்படுத்துவதாயுள்ளது.) 17 அதே விதமாக ஆவிக்குரிய நிலைமையிலும் காணப்படுகின்றது. ஜலமானது - விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு தேவனை விசுவாசித்து, அவரை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெறுதலை உதாரணப்படுத்துகிறது; இரண்டாம் நிலைமையான ஆவியின் பரிசுத்தமாகுதலானது - தேவன் உலகத்தின் மேலுள்ள விருப்பத்தின் ஆவியை இந்த நிலைமையில் பரிசுத்தப்படுத்துதலை உதாரணப்படுத்துகிறது; பின்பு பரிசுத்த ஆவியானவர் வந்து புதிய பிறப்பை தந்து பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரத்தை நிரப்புகிறார். நான் உங்களுக்கு ஏற்கெனவே கூறியபடி: நீங்கள் விசுவாசியாத பாகத்தை புறம்பே வைத்து விட்டு பின்பு பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்கள். கவனியுங்கள்! இக்காரியத்தை இவ்விதமாக உதாரணப்படுத்தலாம்: ஒரு கண்ணாடி பாத்திரம் அங்கே கோழிகள் மேயும் முற்றத்தில் கிடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த பாத்திரத்தை அது இருக்கிற விதமாகவே எடுத்து மேசையின் மேல் வைத்து அதினுள் தண்ணீரையோ அல்லது பாலையோ நாம் வார்ப்பதில்லை. இல்லை ஐயா, அதை இருக்கிற வண்ணமாகவே கையினால் எடுப்பதென்பது நீதிமானாகுதலாகும்; அதை சுத்தப்படுத்துவதென்பது பரிசுத்தமாக்குதலாகும். ஏனெனில் பரிசுத்தமாகுதல் (Sanctify) என்னும் வார்த்தை கிரேக்க மொழியில் அதன் கூட்டு அர்த்தமான “சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கென்று தனியே வைத்தல்” என்று பொருள்படும். (ஊழியத்தில் என்ற விதமாக அல்ல ஊழியத்திற்காக) பின்பு அப்பாத்திரத்தை நிரப்பும் பொழுது, அது ஊழியத்தில் காணப்படுகிறது. 18 நான் இப்பொழுது கூறப் போவதை குறித்து நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். (உங்களை புண்படுத்துவதற்காக நான் இதைக் கூறவில்லை). பரிசுத்த யாத்ரீகள் வட்டமாகிய நீங்களும், நசரேயர் வட்டமாகிய நீங்களும் பெந்தெகொஸ்தேயின் அனுபவத்திற்குள் நடக்கத் தவறிவிட்டீர்கள். பரிசுத்தமாக்குதல் என்ற நிலைமையில் நீங்கள் சுத்திகரிக்கப்பட்டீர்கள், ஆனால் அந்நிய பாஷை பேசுதல் போன்ற பல வரங்களைப் பெற்று ஊழியத்தில் காணப்படும் ஆயத்த சமயம் வந்த போது நீங்கள் பின்வாங்கி உங்கள் பழைய கொட்டகைக்கே திரும்பவும் சென்றுவிட்டீர்கள். கவனிக்கிறீர்களா? அதுதான் சம்பவித்த காரியமாகும். எப்பொழுதும் அவ்விதமே சம்பவிக்கிறது. நான் இதைப் பரிகாசமாகக் கூறவில்லை. என் இருதயத்திலுள்ள பாரத்தை வெளியேற்றுகிறேன். நான் இங்கு வந்த முதலாய் அது என் இருதயத்தை எரித்துக் கொண்டிருந்தது. சகோ. கார்ல், சகோ. டீமாஸ் என்பவர்களாகிய உங்களுடைய உபதேசங்களெல்லாம் எதுவாயிருந்தாலும்... என்னைப் பொறுத்தவரை என் இருதயத்தை எரித்துக் கொண்டிருக்கும் அக்காரியத்தினின்று நான் விடுபட என்னாலான முயற்சியை நான் செய்கிறேன்; மறுபடியும் அது உங்களைப் பொறுத்தது ஆகும். இயற்கையானது ஆவிக்குரியவற்றிற்கும் உவமையாயிருக்கின்றது. வழக்கமாக ஜலமானது வெளிப்படும் போதும், இரத்தமானது வெளிப்படும் போதும் அதைக் குறித்து நீங்கள் ஒன்றும் அதிமாக எதையும் செய்ய முடியாது. ஆனால் பிறக்கும் குழந்தைக்கு ஜீவனை அதன் சரீரத்தில் கொண்டு வர அதற்கு ஒரு அடி கொடுத்து அதை கூக்குரலிட வைக்கவேண்டும். இங்குள்ள எனது சகோதரர்கள் இக்காரியங்களில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் (அவர்களுடைய உபதேசங்களில்). ஆனால் அதிக கல்வியறிவில்லாதவனாகிய நான் இயற்கையை எடுத்து அதற்குக் காரியங்களை உதாரணப்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன். கவனியுங்கள், அதுதான் சம்பவித்தக் காரியம்; ஒரு உண்மைத்துவமான ஆவிக்குரிய குலுக்குதலினால் இச்சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொண்டுச் செல்ல வேண்டியதாயிருக்கின்றது. 19 அடித்தல் என்ற விதமாயல்ல; ஆனால் ஒரு சிறு அதிர்ச்சியை அவனுக்குக் கொடு. அவன் பிறந்துக் கொண்டிருக்கிறான் என்ற அந்த நோக்கமே சில சமயங்களில் அவ்வாறு செய்துவிடும். பிறந்த அச்சிறுவனை எடுத்து சற்று குலுக்கு. அதன் பிறகு அவன் சுவாசிக்கவில்லையென்றால், ஒரு சிறு அதிர்ச்சியை அவனுக்குக் கொடு, பின்பு அவன் கதறியழ ஆரம்பித்து அந்நிய பாஷையில் பேசஆரம்பித்துவிடுவான். (தனக்குத்தானே என்று நான் நினைக்கிறேன்). ஆனால் ஒன்றை கவனியுங்கள் - எவ்விதமானாலும் அவன் ஒரு சத்தத்தைப் பிறப்பிக்கின்றான். பிறந்த ஒரு குழந்தையானது ஒருவித அசைவுமில்லாமல், சப்தமுமில்லாமலிருக்குமானால், அது மரித்தே பிறந்த குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இன்றைக்குள்ள சபையின் காரியமும் அதுதான், நாம் கொண்டிருக்கிறதான கோட்பாடுகளினால் மரித்தே பிறந்த பிள்ளைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கிறோம். அது தான் உண்மை. தேவன் தம்முடைய ஜீவனை அவர்களுக்குள் ஊதத்தக்கதாக அவர்களுக்கு ஒரு சுவிசேஷ அதிர்ச்சியைத் தந்து அதன் மூலம் அவர்கள் தங்கள் சுயநினைவுக்கு வளர செய்ய வேண்டிதாயுள்ளது! அது மிகவும் உண்மையானதொரு காரியம் என்று நாம் காண்கிறோம். இது பக்குவப்படாத வேத சாஸ்திரமாயிருக்கிறது. ஆனால் எப்படியாயினும் இது தான் சத்தியமாகும். 20 கவனியுங்கள், ஒரு விதையின் பிறப்பிலே புதியது தோன்று முன்பு பழைய விதையானது நிச்சயமாக மரிக்க வேண்டியதாயுள்ளது. ஆகவே, மரமானது எல்லா சமயங்களிலும் கடினமானதும், துன்பமானதும், வேதனையானதுமாயிருக்கின்றது. பிறப்பும் அவ்வாறே வேதனையுள்ளதாயிருக்கிறது. ஏனென்றால் நீ இந்த உலகத்திற்குள் ஒரு ஜீவனைக் கொண்டு வருகின்றாய். அது தேவையானது. தம்முடைய வார்த்தை ஒரு விதையாயிருக்கின்றது என்று இயேசு கூறினார். விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் என்று வேதம் கூறுகின்றது. (அதைக் குறித்து நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். ஞாயிறு பள்ளி ஆராதனைப் போன்று நான் போதிக்க விரும்புகிறேன். மேலும் இந்த நாளும் ஒரு ஞாயிற்றுக் கிழமையாயிருக்கிறது). கவனியுங்கள். வார்த்தை விதையாயிருக்கிறது - விதையானது மரித்தாலொழிய புதிய ஜீவனைக் கொண்டு வர முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதன் காரணமாகத்தான் பரிசேயர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை புரிந்துக் கொள்ள முடியவில்லை; ஏனெனில் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்தார்கள். நியாயப்பிரமாணமானது தேவனுடைய வார்த்தையாக விதையின் வடிவத்தில் இருந்தது. ஆனால் வார்த்தையானது மாம்சமானபோது அது நியாயப்பிரமாணமாகாமல் கிருபையின் பிரமாணமாக இவ்வுலகில் தோன்றிற்று. இப்பொழுது கவனியுங்கள். கிருபையும் நியாயப்பிரமாணமும் ஒரே சமயத்தில் நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் கிருபையானது நியாயப்பிரமாணத்திற்கு மேற்பட்டதாயிருந்தது. கிருபை வெளிப்பட்ட போது நியாயப்பிரமாணமானது காட்சியில் காணப்படாமற் போயிற்று. ஆகவே கிருபை பிறக்கத்தக்கதாக தங்களுடைய நியாயப்பிரமாணத்திற்கு மரிக்க, பரிசேயர்களுக்கு மிகவும் கடினமானதொரு காரியமாகக் காணப்பட்டது. இருந்தாலும் நியாயப்பிரமாணமானது போகத்தான் வேண்டியிருந்தது, ஏனெனில் ஒரே சமயத்தில் இரண்டு பிரமாணங்கள் நிலைத்திருக்க முடியாது. இப்பக்கம் போகலாம் என்றும், போகக்கூடாது என்றும் குறிக்கப்பட்ட சட்டத்தையுடைய குறிகாட்டி ஒரே சமயத்தில் இருக்க முடியாது; ஏனெனில் ஒரு சமயத்தில் ஒரு பிரமாணம் அல்லது சட்டம் தான் நிலைத்திருக்க முடியும். ஒரு வேளை இதே பிரமாணத்தின் மூலம் நீ ஒருகாலத்தில் நடந்து சென்றிருக்கலாம், ஆனால் இச்சமயம் அதே பிரமாணம் - நில் என்று கூறுகிறது. கவனிக்கிறீகளா? ஆகவே இரண்டு பிரமாணங்கள் ஒரே காலத்தில் நிலைத்திருக்க முடியாது என்று காண்கிறோம். 21 கவனியுங்கள். அது எப்பொழுதுமே... என்னுடைய சிந்தனையின் பொருள் இப்பொழுது வேதனை, துன்பம், அசெளகரியம் என்பதைப் பற்றியதாகும். அந்த பரிசேயர்கள், தேவனை, துன்பம், அசௌகரியம் மூலமாக அந்த பிரமாணத்திற்கு மரித்தார்கள் என்பதைப் பாருங்கள். அது அவ்விதமாகத் தான் இருக்க வேண்டும். பூமியின் மேல் கனிகளை மழையானது கொண்டு வருகிறது என்று நாம் காண்கிறோம். ''கருமையான மேக மூட்டத்தின் வானத்திலே, சீற்றமுள்ள இடிகளின் மத்தியிலே இது பிறந்திருக்கிறது'' என்று ஒரு கவிஞன் பாடினான். கடுமையான மேக மூட்டமுள்ள வானமும் சீற்றமுள்ள இடிகளும் காணப்படாவிடில் கடலினின்று உயரே எழும்பும் உப்புநீராவி வடிகட்டப்பட்ட சுத்த மழைத்துளியாக நம்மிடையே பிறக்க முடியாது. அந்த மென்மையான இதழையுடைய தண்ணீர்த் துளிகளை கொண்டு வர மின்னல்களும், இடிகளும், பயப்படத்தக்க கடுமையான மேக மூட்டங்களும் தேவையாயிருக்கின்றன. பிறப்பையுண்டு பண்ணுவதற்கு வேதனையும், மரணமும் சம்பவிக்க வேண்டியதாயிருக்கின்றன. மேகங்கள் மரிப்பதினால் அங்கே மழை நீர் உருவாக்கப்படுகின்றது. ஏனெனில் மேகத்தின் ஒரு பாகமாக மழை அங்கு காணப்படுகின்றது. ஒன்று வாழத்தக்கதாக மற்றொன்று மரிக்கின்றது. இங்குள்ள என்னுடைய சில சகோதரர்கள் அப்பிரமாணங்களைக் குறித்து உங்களுக்குச் சொல்ல வல்லவர்களாயிருக்கிறனர். என்னால் இயலாது. 22 ஒரு நிரூபணத்திற்காக இப்பொழுது நாம் வேறொரு சிறு காரியத்தை சற்று பார்ப்போம். மிகவும் அழகான மலர்களில் ஒன்றை நான் குறிப்பிடப் போகின்றேன் - அழகிய மலர்களைக் குறித்த உங்கள் சொந்தக் கருத்துக்களை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கிறீர்கள் - ஆனால் தடாகத்தின் லீலி புஷ்பத்தைப் போன்ற மிகவும் அழகுள்ள மலரை இதுவரை நான் கண்டதில்லை. உங்களில் எத்தனை பேர் தடாக லீலியைப் பார்த்திருக்கிறீர்கள்? ஓ, அதற்கு ஈடான அழகொன்றுமில்லை. இந்த லீலி புஷ்பம் எத்தகையது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ''காட்டு புஷ்பங்கள்“ (ஆங்கில வேதாகமத்தில் ”லீலி புஷ்பங்கள்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதையே சகோ. பிரன்ஹாம் இங்கு குறிப்பிடுகின்றார் - தமிழாக்கியோன்) எப்படி வளருகிறதென்று பாருங்கள். அவைகள் “உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலோமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும், அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று இயேசு கூறினதை நான் நினைவு கூருகிறேன். சாலோமோனின் சர்வ மகிமையின் ஆடைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவைகளாயிருந்தன; ஆனால் இந்த லீலி புஷ்பமோ செயற்கையான வர்ணந் தீட்டுதலினானல்ல, இயற்கையாகவே தன் அழகினால் தன் அழகின் ஜீவியத்தை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. நம்முடைய பெண்மணிகள் லீலி புஷ்பங்களைப் போன்றிருக்கின்றனர். விசுவாசப் பெண்மணிகளாகிய உங்களுக்கு வர்ணங்களும், கண் ரப்பை பச்சை வர்ணங்களும், பலவித கலப்பான முகப் பூச்சுகளும் உங்களை அழகுபடுத்த தேவையில்லையென்று நான் கருதுகிறேன். அழகு என்பது அதின் கிரியையில் காணப்படுகின்றது. அப்போஸ்தலர் 2 மற்றும் 4-ஐ சிறிது எடுத்து யோவான் 3:16 - உடன் சிறிது கலந்து கொள்ளுங்கள், மேக்ஸ் ஃபாக்டர் அழகு சாதனங்களும் தர முயற்சிக்கும் அழகை இது தோற்கடித்துவிடும். உன்னுடைய கணவன் உன்னை இன்னும் அதிகமாக நேசிப்பான், எல்லோரும் உன்னை நேசிப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் உன்னை நேசிப்பார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 23 இந்த லீலி புஷ்பம் எவ்விதம் பாடுபட்டு வளர்ந்து மேலே வருகிறது என்று கவனித்துப் பாருங்கள் என்று இயேசு கூறினார். இந்த சிறிய தடாகத்தின் லீலி எங்கிருந்து வருகிறது என்று கவனித்துப் பாருங்கள்: தவளைகளும், அழுக்கும், சேறும் கலந்த கலங்கிய தண்ணீர்களினூடாக தன்னை உந்தித் தள்ளிக் கொண்டு மேலே வருகிறது. (இந்த சிறிய ஜீவ வித்து), ஆனால் அது சூரிய வெளிச்சத்தின் சமூகத்தில் தன்னை காட்டும் பொழுது, அங்கு புதிய ஜீவனானது பிறக்கின்றது. அந்த சிறிய ஜீவனானது அங்கு ஜீவனை வெளிப்படுத்த வெடித்து சிதறுகின்றது. இத்தகைய நிலைகளினூடாக அது கடந்தாலொழிய தன் ஜீவனை அது வெளிப்படுத்த முடியாது. அது அவ்விதமாகத் தான் வளரவேண்டும். ஏனெனில் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதை தன்னிடமாக ஈர்க்கின்றது. தன்னை ஈர்க்கின்ற சக்தியினிடத்தில் அது சேரும் போது அதன் ஜீவியமானது அழகு நிறைந்ததாய் காணப்படுகின்றது. கிறிஸ்தவ ஜீவியத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாயிருக்கிறதென்று நான் கருதுகிறேன். பரிசுத்த ஆவியினால் அதன் சமூகத்தில் நீ ஒரு நாள் பிறப்பதற்கென்று ஏதோ ஒன்று உன்னை இவ்வுலகத்திலிருந்து இழுத்துக் கொண்டேயிருக்கின்றது. இது எவ்வளவு அழகானதொரு காட்சி! நீ அதற்கு உதவ முயற்சி செய்தால், நீ அதை கொன்று போடுவாய். 24 ஒரு சிறு கோழி குஞ்சு பிறக்கும் போது நிகழும் சம்பவத்தை கவனித்திருக்கிறீர்களா? (முட்டையினின்று வெளிவரும் எந்த ஒரு குஞ்சும்) தன்னை காத்து இருக்கும் பழைய ஓட்டினுள்ளே அது தன்னுடைய பருவத்தையடைய வேண்டியதாயுள்ளது. முட்டையின் அந்த பழைய உள் ஓடு அழிந்துபோக வேண்டியதாயுள்ளது. இந்த சிறியக் குஞ்சு முட்டைக் கூட்டைவிட்டு வெளிவரும் வரை அதன் உள் ஓட்டை தன் சிறிய அலகினால் முன்னும் பின்னும் சுரண்டி உடைக்க வேண்டியதாயிருக்கிறது. என்னுடைய ஊரான கென்னடக்கியில் கோழிக் குஞ்சு அவ்விதமாக வெளிவருவதை ''குத்திக் கொண்டு வருதல்'' என்று அழைப்பார்கள். அதைத் தவிர நல்லதொரு வழி அக்கோழி குஞ்சுகளுக்குக் கிடையாது. ஏன் ஐயா? தேவன் அவைகளுக்குத் தந்த வழி அதுதான். நீ அதற்கு உதவ முயற்சித்தால், அதைக் கொன்றுவிடுவாய். அது தானாகவே முயற்சி செய்து துன்பப்பட்டு உழைத்து வெளிவர வேண்டியதாயுள்ளது! ஒரு கிறிஸ்தவனும் அவ்விதமே செய்ய வேண்டியவனாயிருக்கின்றான். யாரோ ஒருவர் உன் கையைக் குலுக்கி உன்னை உள்ளே இழுத்துக் கொள்வதல்ல காரியம். நீ மரித்து அழுகும் வரை அங்கே கிடந்து, பின்பு தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கின்றாய். அதுதான் தேவன் கொடுத்த வழி. ஒரு புஸ்தகத்தில் உன் பெயர் பதிவு செய்யப்பட்டு, கைகளைக் குலுக்கி, அங்கத்தினனாகி, குதித்து, காரியங்களை நீ செய்ய வேண்டியதில்லை. மாறாக எளிமையான விதத்தில், அந்த கோழிக் குஞ்சுகளைப் போன்று உன்னை சுற்றியிருக்கும் பழைய கூடாகிய ஓட்டைவிட்டு நீ வெளி வருவதே காரியமாகும். 25 ஒரு குழந்தை தான் விரும்புவதை பெற்றுக் கொள்வதற்கு தேவன் அதற்கு எந்த வழியை நியமித்திருக்கிறாரோ அந்த வழியைத் தவிரவேறு நல்லதொரு வழியை நம்மால் தரமுடியாது. பிறந்த ஒரு சிறு குழந்தையின் பக்கத்தில் நீ ஒரு மணியை (Bell) பொருத்தி வைத்து அதினுடைய தொட்டிலைப் பிடித்து அதை நோக்கி, ''என் சிறு மகனே, நான் ஒரு வேதசாஸ்திரி... ஒரு குழந்தையை வளர்ப்பதெப்படியென்பதைக் குறித்து நான் புத்தகங்களை படித்திருக்கிறேன். நீ ஒரு நவநாகரீக குழந்தையென்று இப்பொழுது நான் உனக்குச் சொல்லுகிறேன். நவநாகரீகமான பெற்றோர்களினால், நவநாகரீகமான ஒரு வீட்டில் நீ இப்பொழுது பிறந்திருக்கின்றாய். நீ பசியாயிருக்கும் போதோ அல்லது நானோ உன் தாயாரோ உனக்கு வேண்டும் போது, இதோ இங்கே பொருத்தி வைத்திருக்கும் மணியை நீ அடித்தால் போதும்,“ என்று கூறினால், அது ஒரு போதும் கிரியை செய்யாது. தான் விரும்புவதை அது பெற்றுக்கொள்ள அதற்கென்று நியமிக்கப்பட்ட ஒரே வழி அழுகையே தவிர வேறொன்றுமில்லை. அதுதான் தேவனுடைய வழியாகும். அவ்விதமாகவே நாம் விரும்புவதை பெற்றுக் கொள்ளவும் அழுவதே வழியாகும். கதறியழு! அதைக் குறித்து வெட்கமடையாதே. ''நான் தேவனுக்கென்று பசியாயிருக்கிறேன்'' என்று கதறியழு. உன்னைச் சுற்றிலுமுள்ள போதகர்களையோ, மூப்பர்களையோ அல்லது யாரைக் குறித்தோ நீ கவலைக்கொள்ளாதே. சத்தமிடு! அங்கே ஜோன்ஸ் அமர்ந்திருந்தால் அது எந்தவித வித்தியாசத்தை உனக்கு உண்டாக்கக் கூடும்? நீ சத்தமிட்டு கதறு! அதை அடைய, உனக்கு உதவி கிடைக்கும் வரை உனக்கு இருக்கின்ற ஒரே வழி அது தான். அந்த அநீதியுள்ள நியாதிபதியினிடத்தில் நடந்த சம்பவத்தைக் குறித்து இயேசு நமக்குக் கூறியிருக்கிறாரே! 26 ஒரு சிறு பனித்துளியைக் குறித்து நான் கூறப் போகிறேன் - அதனுடைய தத்துவம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை இங்கு விஞ்ஞானிகள் அமர்ந்திருக்கக் கூடும், இருந்தாலும் என்னுடைய வழியில் நான் அதைக் கூறப் போகிறேன். ஒரு இருண்ட இரவு நேரத்தில் திரளான வாயு மண்டலம் ஒன்றாகக் கூடி சேர்ந்து பூமியின் மேல் விழுகிறது. அது அவ்விதமாக விழும்போது, புதியதோர் காரியம் அந்த இரவில் தானே உதயமாகிறது. ஆனால் காலையில் அதை பார்க்கும் போது, அங்கே ஒரு புல்லின் மேலோ அல்லது உன்னுடைய சட்டையின் விளிம்பிலோ அது தொங்கிக் கொண்டு மிளிருகின்றது. ஆனால் சூரிய வெளிச்சத்தை நீ அதன் மேல் அனுமதிக்கும் போது அப்பனித்துளி எவ்வளவு ஆனந்தம் அடைகிறதென்று நீ கவனித்திருக்கிறாயா? அது அப்படியே மினுமினுவென்று மின்னி நடுங்கிப் போகிறது. ஏன் தெரியுமா? தான் ஆதியிலிருந்த இடத்திற்கு அச்சூரிய வெளிச்சத்தினால் திரும்பவும் இழுத்துக் கொள்ளப்படப் போகிறோம் என்பதை அறிந்ததாய் அது அவ்விதம் மிளிருகின்றது. அவ்விதமே ஆவியினால் பிறந்த எந்த ஒரு ஆணும், பெண்ணும் இருக்கின்றார்கள். வெளிச்சமானது நம் மேல் வீசப்படும் போது, ஏதோ ஒன்று நம்மை களிகூரச் செய்கின்றது. ஏனெனில் எந்த தேவனுடைய மகிமையினின்று நாம் வந்தோமோ அதே இடத்திற்கு நாம் திரும்பப் போகிறோம் என்று அறிந்திருக்கிறதினால் அது நம்மை களிகூரச் செய்துவிடுகிறது. அப்பனித்துளியானது சூரிய ஒளி அதன் மீது பட்டவுடன் களிப்பால் அது மிளிர்கின்றதின் காரணம், தான் முன்பிருந்த இடத்தை திரும்பவும் அடையப் போகிறோம் என்ற அதன் உணர்வேயாகும். இச்சிறு காரியங்களால் நாம் எத்தகைய படிப்பினைகளை அறிந்துக் கொள்கிறோம்! இதிலே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க முடியும். ஆனாலும் நாம் இப்பொழுது வேறொரு காரியத்திற்குச் செல்வோம். 27 புதிய விதை தோன்று முன்பு பழைய விதையானது அழிய வேண்டுமென்பதை நாம் பூரணமாக அறிந்திருக்கிறோம். அது மரிக்கிறது மட்டுமல்ல, முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. அது உண்மையென்று நாம் அறிந்திருக்கிறோம். மறுபிறப்பும் அவ்விதமாகவேயுள்ளது. நீ மறுபடியும் பிறந்த பின்பு திரும்பவும் பழைய ஜீவியத்திற்கு ஒரு போதும் செல்லாமல் தொடர்ந்து முன்னோக்கிச் செல்கின்றாய். இன்றைக்கும் நம்மிடையே உண்மையான மறுபிறப்பு அநேகருக்கு உண்டாகிறதில்லை. காரணம் அவர்கள் தாங்கள் இருக்கிறதான பழைய அமைப்புகளுக்கு மரிக்க விரும்புகிறதுமில்லை, அதனின்று வெளிவரவும் விரும்புகிறதில்லை; மாறாக பழைய அமைப்புகளிலே அவர்கள் இருந்து கொண்டு மறுபிறப்பையும், இக்காலத்திற்குரிய செய்தியையும் குறித்து உரிமைக் கொண்டாடுகிறார்கள். லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் என்பவர்களின் கீழிருந்த அமைப்புகளை நாம் காண்கிறோம். இன்றைக்கு அதை சார்ந்திருப்பவர்கள் அந்த பழைய உபதேசத்திலே நிலைத்திருக்க முயற்சி செய்து, இன்றைக்குரிய காரியத்திற்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்; ஆனால் புதிய அமைப்பு உண்டாவதற்காக பழைய அமைப்பு மரிக்க வேண்டியதாயிருக்கிறதே!இருந்தாலும் அவர்கள் அதிலே நிலைத்திருக்க விருப்பங் கொள்கிறார்கள். 28 கவனியுங்கள், பழைய ஸ்தாபன அமைப்பானது மரித்துவிட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்கு அழிக்கப்பட அவர்கள் விரும்புகிறதில்லை. ''அழிக்கப்படுதல்“ (Rot) என்பது ”முற்றிலுமாய் ஒன்றுமில்லாமற்போவது'' என்று பொருள்படும். மறு பிறப்பைக் குறித்து அவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்களென்றால் அந்த உரிமைக் கொண்டாடுதல் மறுபிறப்பின் அடையாளமேயன்றி வேறல்ல; ஆனால் மரித்து அழிந்து போகுதல் உண்மையான மறு பிறப்பை கொண்டு வருகின்றது. லூத்தர், வெஸ்லி, மற்ற எல்லாக் காலங்களிலுமிருந்து நாம் மரித்து வந்தது போல நீயும் அவ்விதமாக அதற்கு மரித்து அழிந்துவிட வேண்டும். அன்று ஒரு மறுபிறப்பு உதயமான போது, லூத்தர் 'விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்' என்ற ஒரு வார்த்தையுடன் வந்தார். அவரால் கத்தோலிக்க அமைப்பாகிய பழைய உபதேசத்தில் இன்னுமாக இருக்க முடியவில்லை. அவர் அவ்விதமாக வரத்தான் வேண்டியிருந்தது. ஆங்கிலேய சபையின் நிலைமையை சீர்திருத்த கால்வினியர்களின் (Calvinistic) உபதேசம் அதற்கு தேவையாயிருந்தது. பின்பு தேவன் ஆர்மீனிய (Armenian) உபதேசத்தை ஜான்வெஸ்லி எழும்பும் வரை இவர்கள் அத்தகையோரின் உபதேசங்களின் கீழ் அடைபட்டிருந்தனர். புதிய ஒன்று வருவதற்காக பழைய அமைப்பு அங்கே மரிக்க வேண்டியதாயிருந்தது ஜான் வெஸ்லியின் காலம் ஓய்ந்த போது அரும்புகளான மற்ற எல்லா சிறியக் காலங்களும் அங்கே மரத்தண்டில் காணப்பட்டன. பின்பு வரங்களை திரும்பப் பெறுவதலான பெந்தெகொஸ்தெயின் காலம் வந்த பொழுது, பாப்டிஸ்டு (Baptist), பிரஸ்பிடேரியன் (Presbyterian), பரிசுத்த யாத்ரீகர் (Pilgrim Holiness), நசரேயர் (Nazarene), கிறிஸ்து சபை (Church of Christ) போன்ற எல்லா ஸ்தாபனங்களிலும் அவர்கள் வெளிவந்து புதிய பிறப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது! 29 நீங்கள் பயித்தியக்காரர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். ஏனெனில் பவுலும்கூட, தான் உரிமைக் கொண்டாடிய பழைய நம்பிக்கையினின்று மரித்து வெளியே வந்தபோது, ''இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின் படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து...“ (அப். 24:14) என்று கூறினார். பரிசேயர்கள் பவுலின் மனந்திரும்புதலை மதபேதம் என்று வர்ணித்தனர். பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டை பிரசவித்த போது, அந்த புதிய ஜீவனை பவுல் ஏற்றுக் கொண்டார்.ஆகவே பவுல் புதியதை பெற்றுக் கொள்ளத்தக்கதாக பழையவற்றிற்கு மரிக்க வேண்டியதாயிருந்தது. (இது ஒரு நிழல் போன்று அமைந்திருக்கின்றது). அத்தகையதோர் சூழ்நிலையில் தாம் நாம் இப்பொழுது காணப்படுகிறோம். என்னுடைய கருத்து இவ்விதமாயிருப்பதினால் நீங்கள் என்னை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நிச்சயமாக ஏதாகிலும் ஒன்றில் சார்ந்திருக்கத்தக்கதாக சபைகளானது அந்த அளவில் தங்களது அமைப்புகளை கிரமப்படியாக (methodical) கொண்டிருக்கின்றது. நீங்கள் ஒரு அடையாள அட்டையையோ, அல்லது ஒரு ஐக்கிய சீட்டையே பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும். என்னுடைய இச்செய்தியை நீங்கள் விசுவாசிப்பதினால், எனக்குத் திறந்திருக்கிறதான ஒரே ஒரு கதவு இந்த வியாபாரிகளின் சுவிசேஷக் கூட்டம் தான். அவர்கள் ஒரு ஸ்தாபனமாக இல்லாதவரை, நான் அங்குச் சென்று என் இருதயத்திலுள்ள செய்தியை ஜனங்களுக்குக் கொடுப்பேன். ஆனால் இந்த பெந்தெகொஸ்தே சபை ஒரு வழக்கமான அமைப்பை பெற்றுவிட்டது. பெந்தெகொஸ்தேயின் ஜனங்களாகிய உங்களை நான் நேசிக்கிறேன்; பெந்தெகொஸ்தே ஒருபோதும் ஒரு ஸ்தாபனமல்ல. நீங்கள் வேண்டுமானால் அவ்விதம் அமைத்துக் கொள்ளலாம். பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவமாயிருக்கின்றது. ஸ்தாபனமல்ல. தேவன் தம்முடைய வார்த்தையில் அடையாளம் காட்டும் போது அவர்கள் அதை உற்றுப் பார்த்து விசுவாசித்தாலும், தங்களுடைய பழையவற்றிற்கு முற்றிலும் அழிந்து போகும் நிலைமையானது அவர்களுக்கு மிகவும் கடினமாயிருக்கின்றது. ''நான் என்ன செய்வேன்? என்னுடைய ஆகாரத்தை எங்கு பெற்றுக் கொள்வேன்?'' என்றெல்லாம் கேட்கிறார்கள். “தேவனே உன்னுடைய போஜனமாயிருக்கிறார் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்” முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். இதை இவ்விதமே நான் விட்டுவிடுகிறேன்; ஏனெனில் நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 30 புதிய வானத்தையும், புதிய பூமியையும் நாம் பெற்றுக் கொள்வோம் என்று தேவனுடைய தீர்க்கதரிசிகள் நமக்கு கூறியிருக்கின்றார்கள். அந்த வசனமானது வெளிப்படுத்தின விசேஷத்தில் 21-ம் அதிகாரத்தில் காணப்படுகின்றது. ''பின்பு, நாம் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்திய பூமியும் ஒழிந்து போயின;'' சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. ஒரு புதிய பூமியை நாம் பெற்றுக் கொள்வோமானால், பழைய பூமியானது ஒழிந்து போக வேண்டும். ஏனெனில் புதிய பூமியும் பழைய பூமியும் ஒருமிக்க நிலைத்திருக்க முடியாது - அல்லது புதிய உலகமும் பழைய உலகமும் ஒருமிக்க ஒரே சமயத்தில் நிலைத்திருக்க முடியாது. ஆகவே புதிய பூமியைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக பழைய பூமியானது மரிக்க வேண்டுவதாயிருக்கின்றது. இப்பொழுது கவனியுங்கள். பழையது மரிக்க வேண்டுமானால், அது புதியதை பிறப்பிக்கத்தக்கதாக இப்பொழுது பிரசவ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். 31 இங்கு இரண்டு மூன்று மருத்துவர்கள் இருக்கிறீர்கள் என்று நானறிந்திருக்கிறேன், உங்களுடைய சமூகத்திற்கு முன்பாக இப்பிரசவ வேதனைக்குரிய காரியங்களை நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு மருத்துவர், பிரசவ வேதனையிலிருக்கும் ஒரு பெண்ணை பரிசோதிக்கும் போது, அவர் செய்யும் முதலாவது காரியம் அப்பெண்ணிடம் ஏற்படும் பிரசவ வேதனையின் நேரங்களை கவனிப்பதேயாகும். மருத்துவர் அவள் எப்பொழுது வேதனைகளைப் பெறுகிறாள் என்று நேரத்தைப் பார்த்து அதைக் குறித்துக் கொள்கிறார். மேலும் ஒவ்வொரு வேதனையின் இடைவெளி எவ்வளவு என்றும், ஒன்றிற்கும் மற்றொன்றிற்குமுள்ள வேதனையின் உக்கிரமம் எவ்வளவு என்பதையும் மருத்துவர் கவனிக்கிறார். ஒரு வேதனை மற்றொன்றைக் காட்டிலும் கடுமையாகக் காணப்பட்டு இவ்விதமாக வேதனையானது நெருக்கமாக அதிக உக்கிரத்துடன் ஒட்டுமொத்தமாக பெருகிக் கொண்டே வருகிறது. இவ்வாறு தான் மருத்தவர் சோதித்தறித்து பிரசவ நேரத்தைக் குறிக்கிறார். இப்பொழுதிருக்கும் உலகமானது ஒரு புதிய உலகத்தைப் பிறப்பிக்க வேண்டுமானால், நாம் இவ்வுலகத்தின் மேல் அடைந்துக் கொண்டிருக்கும் சில பிரசவ வேதனைகளைக் குறித்து இப்பொழுது ஆராய்வோம். அவ்விதம் நாம் ஆராயும் போது, அவள் என்ன நாளில் அல்லது எவ்வளவு தூரம் தன்னுடைய பிரசவ வேதனையில் காணப்படுகிறாள் என்பதை நாம் நிதானிக்கலாம். 32 முதல் உலக மகா யுத்தமானது மகத்தான பிரசவ வேதனையை நமக்குக் காட்டிற்று. அவள் தன்னுடைய முதலாவது பிரசவ வேதனைக்குள் சென்று கொண்டிருக்கிறாள் என்பதை அது காண்பித்தது. ஏனெனில்அந்த சமயத்தில் அவளுக்கென்று குண்டுகளும், இயந்திரத் துப்பாக்கிளும், விஷ வாயுவும் கொண்டுவரப்பட்டன. உங்களில் அநேகருக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கிறேன். நான் அப்பொழுது 8 வயது சிறுவனாக இருந்தேன். மஞ்சள் நிறமுள்ள இந்த க்ளோரின் விஷ வாயுவைக் குறித்து ஜனங்கள் பேசிக் கொண்டதை நான் ஞாபகம் கொள்ளுகிறேன் - அது எப்படியிருந்தது என்றும், இந்த முழு உலகத்தையும் அது எரித்து விடப்போகிறது என்றும் அவர்கள் கூறினார்கள். அது உடைந்து சிதறும் காரியமானது, பூமியின் மேல் புயல் வீசுவதை போன்றிருக்கும் என்று யூகிக்கிறேன். ஏனெனில் அந்த விஷ வாயுவான மகத்தான ஆயுதத்தின் காரணமாக எல்லோரும் மரணத்திற்கு அஞ்சி நடுங்கினர். இந்த பூமியானது முதலாம் வேதனையினூடாக கடந்து சென்றது. இரண்டாவது உலக மகா யுதத்தத்தையும் நான் பெற்றுக் கொண்டோம் என்று காண்கிறோம். இந்த பூமியானவளின் பிரசவ வேதனையானது மிகவும் மகத்தானதாக எல்லா சமயங்களிலும் காணப்பட்டது. அணுகுண்டை அந்த சமயத்தில் வெடிக்கச் செய்ததினால் அவள் பெரும்பாலும் இழந்து போனவளாகக் காணப்பட்டாள். ஏனெனில் அந்த அணுகுண்டானது ஒரு முழு பட்டணத்தையே அழிக்கக் கூடியதாயிருந்தது. பூமியின் மேல் சொரிந்த முதலாவது உலக ஆயுதத்தின் அழிவின் வேதனையைக் காட்டிலும் இரண்டாம் உலக யுத்தத்தின் வேதனையானது மிகவும் உக்கிரமாகக் காணப்பட்டது. 33 இப்பொழுதோ, பிள்ளை பேரானது சமீபித்துவிட்டது என்று அவள் அறிந்தவளாயிருக்கின்றாள். முழு உலகத்தையும் அழித்து விடக்கூடிய ஹைடிரோஜன் குண்டுகளும், கண்டம் விட்டு கண்டம் பறக்கும் ஏவுகணைகளும் இப்பொழுது உண்டு என்று அறிந்தக் காரணத்தினால் அவள் மிகவும் பயத்தோடும் பதைபதைப்போடும் காணப்படுகின்றாள். ஒருநாடு, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும், மற்றொரு நாட்டை அது பயப்படுத்துகிறதாயிருக்கிறது. ஏனெனில் அந்த பறக்கும் ஏவுகணைகளை விரும்பிய இடத்தில் போட்டு, தங்களால் அழிவையுண்டாக்க முடியும் என்று அவர்கள் கொக்கரிக்கின்றார்கள். ரஷியா தேசமானது, நம்முடைய தேசத்தை அழித்துவிட முடியும் என்றும், அணுகுண்டுகளால் தன்னுடைய தேசம் உடைவதை தவிர்த்து விடமுடியும் என்றும் திருப்தியோடு அறிக்கையிடுகிறதென்று அன்றொரு நாள் ஒரு செய்தியின் வாயிலாக நான் அறிந்தேன். அதைக் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரும் இத்தகையதோர் திருப்திக் கொண்டிருக்கின்றனர். தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுமளவிற்கு விஞ்ஞானமானது தேவனுடைய மகத்தான ஆய்வுக் கூடத்திற்குள்ளே அத்துமீறி நுழைந்துவிட்டது. ஞானமானது தன்னையே அழித்துக் கொள்ளட்டும் என்று தேவன் விட்டு விடுகின்றார். தேவன் எதையும் அழிக்கவில்லை. ஆதியிலே மனிதன் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக சாத்தானுடைய ஞானத்தை ஏற்று தன்னை அழித்துக் கொண்டது போல இப்பொழுதும் அவ்வாறே அவன் முடிவடைகிறான். இப்பொழுது, அவள் கடந்து சென்றாக வேண்டும் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அவளால் இன்னுமாக அதற்கு தாக்கு பிடிக்க முடியாது. 34 ரஷியா தன்னைக் காப்பாற்றிக் கொண்டு இந்த நம்முடைய தேசத்தை இன்றே அழித்துவிட நினைத்தால் அவ்விதம் அவளால் செய்யக்கூடும் என்று நான் நம்புகிறேன். எந்தவொரு சிறு நாடும் அவ்விதம் செய்யக் கூடும். ஆனால் அவ்விதம் அவர்கள் செய்ய பயப்படுவதன் காரணம் இந்த உலகம் அத்தகைய சூழ் நிலையில் ஆகாய மண்டலத்தில் நிலைத்து நின்று அதை தாங்கிக்கொள்ள முடியாது என்பதுதான். ஆகவே, இவ்வுலகமானது, தான் கைவிடப்படத்தான் வேண்டும் என்பதை அறிந்திருகிறதினால் அதினுடைய பிரசவ வேதனையானது மிகவும் உக்கிரமாயிருக்கின்றது. ஒரு புதிய பிறப்பு மிகவும் சமீபத்திலிருக்கிறதை கவனியுங்கள். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கின்றேன். இவ்வுலகத்தை சகித்து நான் களைத்துவிட்டேன். மரணம், துன்பம் இன்னும் எல்லாவித தொந்திரவுகளும், குடிகொண்டிருக்கும் உலகமிது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். நாம் ஒவ்வொருவரும் இதை விட்டுவிட நினைப்பதினால் நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன்; அத்தகைய நேரம் சமீபத்திலிருக்கிறதை நான் அறியும் போது அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். யோவானும் இதையே மனதில் கொண்டவராய், “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்'' என்று கூறுகிறார். 35 இப்பொழுது கவனியுங்கள், புதிய பிறப்பைக் கொண்டு வரத்தக்கதாக அவள் நிச்சயமாக அழிந்துவிட வேண்டும். என்னவிதமாய் அவள் பழுதடைந்து போனாள் என்பதை பாருங்கள், சகோதரரே, அவள் முற்றிலுமாய் பழுதடைந்து போனாள் அவளுடைய அரசியலும், அமைப்புகளும், எந்த அளவில் பழுதடைய முடியுமோ அந்த அளவிற்கு பழுதடைந்துவிட்டன. அவளுடைய மதப்பிரகாரமான அரசியலிலும் சரி, எந்த அரசாங்க சம்மந்தமான அரசியலிலும் சரி, அமைப்பிலும் அவளுக்கு சொந்தமான அஸ்திபாரம் கிடையாது. ஒருவன், ''நான் குடியரசு கட்சியை சேர்த்தவன்'' என்கிறான், இன்னொருவன் “நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவன்'' என்கிறான். மத அடிப்படையில் எடுத்துக் கொண்டால், ஒருவன், ''நான் பாப்டிஸ்டு'' என்கிறான். இன்னொருவன், ''நான் மெத்தோடிஸ்டு'' என்கிறான் என்ன இது? முழு காரியமும் பழுதடைந்துவிட்டது! இது கைவிடத்தக்கதாக உலகமேயாகும்!சீர்திருத்தலுக்கென்று ஒரு ஜார்ஜ் வாஷிங்டனையோ அல்லது ஆபிரகாம் லிங்கனையோ திரும்பவும் இந்த அமெரிக்க தேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்பினாலும் இது ஒருபோதும் மனந்திரும்பாது! ஏனெனில் இது மீட்கப்படுதலுக்கப்பால் சென்றுவிட்டது! அவளுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு காரியம் மாத்திரமே இருக்கிறது, அது சிருஷ்டிகருடைய வருகையே ஆகும். ஆமென். அவள் வேதனையிலும் துன்பத்திலும் காணப்படுகின்றாள். இதைக் குறித்து என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவன் இந்த வழியாகப் பார்க்கிறான்; மற்றொருவன் வேறு வழியாகப் பார்க்கிறான். ஒருவன் மற்றவனைக் கண்டு பயப்படுகிறான். ஒருவன் ஒன்றை செய்ய நினைத்து ஒன்றை அழிக்க முயற்சிக்கும் போது, மற்றவன் அதற்கு விரோதமாக ஏதோ ஒன்றை செய்து அதை அழிக்க முயற்சித்து, இவ்விதமாக பாவ மனிதனின் கரங்களில் உலகமானது கொள்ளப்பட்டு, ஐந்து நிமிட நேரத்தில் அவன் இந்த உலகை அழிக்கும் வரை இவைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருக்கும். பாருங்கள்! உலகமும், ஜனங்களும் தங்களால் இனிமேலும் இவைகளைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று அறிந்திருக்கின்றனர். 36 அது தேவனுக்கென்று நடைபெறப் போகிறதென்று அறிந்திருக்கின்றனர். இந்த வானமும் பூமியும் முழுவதும் அக்கினிக்கிரையாகப் போகின்றன. ஒரு புதிய உலகம் பிறப்பதற்காக இந்த பழைய உலகமானது முழுமையாகப் புதுப்பிக்கப்படப் போகிறது. தேவன் அதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். அவள் தன்னுடைய எல்லா அமைப்புகளிலும் பழுதடைந்து போனாள். பழுதடையத் தக்கதான கிரியையை அவள் செய்யத்தான் வேண்டியிருந்தது. ஆகவேதான் அவள் நரம்பு தளர்ச்சியுடையவளாய், முகம் சிவந்து, பதைபதைப்பாய் எல்லாவிடங்களிலும் பூமியதிர்ச்சிகளையும், கொந்தளிக்கும் கடல் அலைகளை அலாஸ்கா (Alaska) என்றவிடத்திலும்; கடற்கரை ஓரம் எங்கும் பூமியதிர்ச்சிகளையும் தோன்றப் பண்ணினாள். ஜனங்கள் இதைக் கண்டு, ''நாம் இதை விட்டுச் சென்றுவிடலாமா?நாம் இதை விட்டுச்சென்று விடலாமா?'' என்று எழுதிக் கொண்டிருக்கின்றனர். என்ன செய்வது என்று அவர்கள் அறியாமலிருக்கிறார்கள் பார்த்தீர்களா? பாதுகாப்பான இடம் என்று ஒன்றும் இங்கில்லை. ஆனால் பாதுகாப்பான இடமொன்று நமக்குண்டு. அதுதான் ஜீவிக்கிற தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்கிற புகலிடம். இதற்கு வெளியே இருப்பதெல்லாம் அழிந்து போகும் என்று தேவன் நிச்சயமாகக் கூறியிருக்கிறார். 37 புதிய பூமியானது பிறக்க இருக்கும் தருணத்தில் இவைகள் சம்பவிக்குமா (அவள் பிரசவ வேதனையின் சூழ்நிலையில் இருப்பாளானால்) என்று நாம் மருத்துவரின் புஸ்தகத்தில் பார்ப்போம். வேதாகமமாகிய மருத்துவரின் புஸ்தகத்தில் மத்தேயு 24-ம் அதிகாரத்தில் என்ன தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அவளுடைய பிள்ளைபேற்றிற்கு உரிய அறிகுறிகள் யாவை என்றும் பார்ப்போம். இப்பொழுது கவனியுங்கள், ஒரு மருத்துவர் பிள்ளை பிறப்பதற்குரிய அடையாளங்களையும் அதன் நேரத்தையும் அறிந்திருப்பாரானால் அதற்குரிய எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவிடுவார். ஜலமானது முதலில் வெளிப்பட்டுவிட்டது. இரத்தமும் கூட வெளிப்பட்டுவிட்டது. இனி சம்பவிக்க வேண்டியதெல்லாம் குழந்தை வெளி வந்து விழ வேண்டியதுதான். ஆகவே அவர் அதற்கான காரியங்களை ஆயத்தம் செய்கிறார். இந்த நேரத்தில் சரியாக என்ன சம்பவிக்கும் என்று இயேசு நமக்குக் கூறியிருக்கிறார். மத்தேயு 24-ம் அதிகாரத்தில் ஆவிக்குரிய சபையும் (உண்மையான சபை) மாம்சத்திற்குரிய சபையும் (போலியானவர்கள்) மிகவும் நெருக்கமாக இருந்து, கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்று இயேசு கூறியிருக்கிறார். நோவாவின் நாட்களில் சம்பவித்தது என்ன? ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள்; பெண் கொண்டு கொடுத்தார்கள்; இன்றைக்கும் உலகத்தில் காணப்படும் எல்லா நீதி கேடுகளையும் அவர்களும் செய்தார்கள். அதுவே திரும்பவும் சம்பவிக்கும் என்று மருத்துவரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. ஆகவே, இவைகள் சம்பவிப்பதை நாம் காணும்போது பிள்ளைபேறு நெருங்கவிட்டது என்பதை அறிந்து கொள்கிறோம்! அது அவ்விதமாகத்தான் நிகழ வேண்டும், ஐயா! ஒரு தேசம் என்ற கண்ணோட்டத்தில் நாம் அதை பார்க்காமல், உலகம் என்ற கண்ணோட்டத்தில் அதைக் காண்கிறோம். 38 இப்பொழுது நாம் இஸ்ரவேல் என்னும் சபையானவைகளை சற்று தொடர்ந்து சென்று பத்து நிமிடங்கள் அவளைக் குறித்து ஆராய்வோம். உலகத்திற்கு வந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியின் கீழும் இஸ்ரவேல் பிரசவ வேதனையுற்றாள். தீர்க்கதரிசியின் செய்தியினால் அவள் பிரசவ வேதனையடைந்தாள். தீர்க்கதரிசி என்ன செய்தான்? தீர்க்கதரிசி வார்த்தையுடையவனாய் அவளிடத்தில் வந்து அவளுடைய அஸ்திபாரங்களை குலுங்கச் செய்தவரை அவள் பழுதாய் போனவைகளை மிகுதியாய் விதைத்து தன்னுடைய சரீரத்திலே பழக்க வழக்கமான முறைமைகளை உண்டாக்கிக் கொண்டு தன்னை பாழாக்கிக் கொண்டாள்! இஸ்ரவேலர் எல்லோராலும் வெறுக்கப்பட்டனர். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினபோது, சபையானது தன்னில் தானே பிரசவ வேதனைக்குள் சென்றது, ஏனெனில் வார்த்தை தீர்க்கதரிசியிடம் மட்டுமே வருகிறதாயிருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் உரைக்கப்பட்ட வார்த்தையானது அந்தக் காலத்திற்குரிய தீர்க்கதரிசியினால் வெளிப்படுத்தப்படுகிறது - எப்பொழுதும் அவ்விதமே நிகழுகின்றது, தீர்க்கதரிசி வந்து அவளுடைய நவநாகரீக அமைப்பினின்று குலுக்கி எடுக்கும் வரை, சபைகள் வார்த்தையைச் சுற்றிலும் அநேக விதமான கோட்பாடுகளினால் தங்களைக் கட்டிக்கொண்டன! அவளுக்கு பிரசவ வேதனை இருந்தது. அது என்ன? - “வார்த்தைக்கு திரும்புங்கள்! ஜீவனுக்குத் திரும்புங்கள்” என்ற தீர்க்கதரிசியின் அறைகூவலே அது. பழக்க வழக்கங்கள் ஜீவனையுடையதாக இல்லை! தேவனுடைய வார்த்தையே ஜீவனுடையதாயிருக்கிறது! பழக்க வழக்கங்கள் வார்த்தையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தாலும் அவைகளில் ஜீவனில்லை. தீர்க்கதரிசியினுடைய செய்தியானது மீதமானவர்களை வார்த்தைக்குத் திரும்பக் கொண்டு வந்து புகலிடம் ஈந்துவிடும். ஒரு சிறு கூட்டமே விசுவாசித்து வெளி வருவார்கள். நோவாவின் நாட்களில் எட்டு பேர் மட்டுமே இரட்சிக்கப்பட்டனர் - தேவன் மீதமானவர்களுக்கு புகலிடம் தந்து, மற்றவர்களையோ அழித்த விட்டார். 39 ஒவ்வொரு காலங்களினூடாகவும் இதே கிரியை தொடர்ந்து முடிவாக சபையானது ஒரு ஆண் பிள்ளையை பிரசவித்தது; அந்த ஆண்பிள்ளை தாமே மாம்சமான வார்த்தையே. “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. ஒவ்வொரு பிசாசையும், அவருக்கு எதிராக வந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு வல்லமையையும் அவர் பிதாவின் வார்த்தையினால் ஜெயங்கொண்டார். பிசாசு அவரை சோதித்த ஒவ்வொரு சோதனையிலும், அவர் பிசாசைக் கடிந்துக் கொண்டார் - தம்முடைய சொந்த வல்லமையினாலல்ல, வார்த்தையாகிய தேவனின் வல்லமையிலே சாத்தானைக் கடிந்துக் கொண்டார் “என்று எழுதியிருக்கிறதே...”, ''என்று எழுதியிருக்கிறதே...'' என்று கூறி சாத்தானை ஜெயித்தார். ஏனெனில் அவரே அந்த வார்த்தையாயிருந்தார்! ஏவாள் வார்த்தையாயில்லாதபடியால், சாத்தான் அவள் மேல் பறந்தபோது அவள் அங்கே தோற்று போனாள். அவன் மோசேயின் மேல் பறந்தபோதும் அதுவே சம்பவித்தது. ஆனால் அவன் இந்த தேவ குமாரனை தாக்கினபோது, அவர் 10,000 வோல்ட் (volts) மின் விசையின் வல்லமையாய் இருந்தபடியால், அவனுடைய ஆடிக் கொண்டிருந்த சிறகுகளெல்லாம் அவ்வல்லமையினால் பிய்த்தெறியப்பட்டன. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திர மல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே'' என்று அவர் கூறி சாத்தானை வென்றார். அங்கே தான் அந்த மனித குமாரன் மாம்சமாகக் காணப்பட்டார். வார்த்தையின் பிரதிநிதியாக, தேவனுடைய நித்திய வார்த்தையே, மாம்சத்தில் தம்மை இந்த உலகிற்கு வெளிப்படுத்தினார்! 40 ஆகவேதான் அவர் மனுஷர்களுடைய இருதயத்திலுள்ளதை அறிந்திருந்தார். அவர் தேவ வார்த்தையாக இருந்ததால்தான், பிலிப்பு யாரென்றும் எங்கிருந்தான் என்றும், சீமோன் பேதுரு யாரென்றும், கிணற்றடியில் காணப்பட்ட அந்த ஸ்திரீ யாரென்றும் அவரால் கூற முடிந்தது. ஏன்? அவரே வார்தையானவராயிருந்தார். அது உண்மை, ஐயா. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' (எபி.4:12). வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை அதுவே தான் என்று அந்த பரிசேயர்கள் ஏன் அதைக் காணக் கூடாத குருடராயிருந்தனர்? ஆசாரியத்துவம் என்ற அமைப்பினால் தங்களை அவர்கள் மூடிக் கொண்டதினாலல்லவோ? பழைய முறைமை கைவிடப்பட வேண்டியதாயிருக்கிறதே! அது வார்த்தையாகத்தான் இருந்தது. ஆனால் என்ன வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதோ அது நிறைவேறுதலைக் கண்டது. ஆகவே அது அவ்விதமாக நிறைவேறுமானால், நிறைவேற்றப்பட்ட ஒன்று கடந்து போகத்தானே வேண்டும். வித்து தொடர்ந்து செல்கின்றது. ஆனால் உமியோ உதிர்ந்து விடுகிறது. மோசே, நோவாவின் செய்தியைக் கொண்டு வர இயலாது. அது போலவே இயேசுவும் நோவாவின் செய்தியைக் கொண்டு வந்திருக்க இயலாது. ஏனெனில் அது வேறொரு காலத்திற்குரிய செய்தியாயிருந்தது. பழைய வித்து ஜீவனுள்ளதாகத்தான் இருந்தது. ஆனால் அது தன் கிரியைக்கான நோக்கத்தை நிறைவேற்றின பின்பு மரித்து கடந்துபோயிற்று. ஜீவன் எங்கிருந்ததோ அதைக் கொண்டு வர பழையதிலிருந்து புதியது மறுரூபமாக வேண்டியிருந்தது. ஆனால் இன்றுவரை ஜனங்களை கலக்கத்திற்குள்ளாக்கியிருப்பது எது? லூத்தரின் செய்தியினின்று ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் சென்று அல்லது பெந்தெகொஸ்தேயின்று அவ்விதமாக சென்று ஒரு மதில் சுவரை நாம் எழுப்பிக் கொண்டிருக்கவில்லை. மாறாக நாம் ஒரு கோணத்தில் அல்லது ஒரு மூலையில் திருப்பி ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையானது வரைப் படமாயிருக்கிறது! ஒரு நேர் கோட்டில் யார் வேண்டுமானாலும் கட்டிடத்தைக் கட்டலாம். ஆனால் ஒரு கோணம் அல்லது மூலைக்குத் திரும்பும்போது, அதைக் கட்ட விவரம் தெரிந்த ஒரு தலைமைக் கொத்தன் அவசியமாயிருக்கிறது! அதை செய்வதற்கு தேவனுடைய வல்லமை அவசியமாயிருக்கிறது! பரலோக்தினின்று அபிஷேகிக்கப்பட்ட ஒருவர் அனுப்பப்பட்டு அக்காரியத்தை நிறைவேற்ற வேண்டியதாயிருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறு நடைபெற்றது. தீர்க்கதரிசிகளின் காலத்தில்... கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிகளுக்கு வந்து, அவர்கள் அத்தகைய திருப்பங்களை ஒழுங்காகச் செய்தனர். ஆனால் மற்றவர்களோ ஒரு மதில் சுவரைக் கட்ட விரும்பினார்கள். இது ஒரு மதில் சுவரில்லை, ஐயா. இது தேவனுடைய கட்டிடமாயிருக்கிறது. 41 இப்பொழுது கவனியுங்கள், ஒவ்வொரு காலத்திலும் இருந்த அமைப்புகள் அழிந்துபோயின என்ற உண்மையை நாம் உணருகிறோம்; பழுதடைந்து அழுகிக் கொண்டிருந்த அமைப்பினின்று அந்த சபையை அவள் வெளிக்கொண்டு வரும்வரை அவர்கள் ஒவ்வொருவரின் முறைமைகளும் மரித்து அழியத்தான் வேண்டியிருந்தது. அழிவினின்று வார்த்தை தானே புறப்பட்டு வந்தது. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறதாயிருக்கிறது. அது ஒருபோதும் ஒரு சபை குருக்களுக்கு வருவதில்லை. கவனியுங்கள், இவ்விதமாக தீர்க்கதரிசிகளுக்கு வந்த வார்த்தை முடிவில் மனித ரூபமாக மாம்சத்தில் இவ்வுலகத்தில் வந்து உதித்தது. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. அவரே வார்த்தையானவர். தீர்க்கதரிசிகள் அந்த வார்த்தையின் ஒருபாகமாக அவரவர் காலத்தில் காணப்பட்டனர். நாமும் கூட வார்த்தையின் ஒரு பாகமாக இருந்து வார்த்தையை பின்பற்றுகிறோம். ஆனால் அவரோ வார்த்யிைன் எல்லா பரிபூரணமுமானவர்! அவர் தன்னை தேவனுடன் சமமாக்கிக் கொள்கிறார் என்று அவர்கள் அவரை குற்றம் சாட்டினர், ஏனெனில் அவர் தான் அந்த மனுஷக்குமாரனாக இருந்தார், அவர்கள் அவரிடம் “என்ன, நீ உன்னையே தேவனாக்கிக் கொள்கிறாயே?'' என்று கேட்டனர். அவர், ''தேவனுடைய வசனம் யாரிடத்தில் வருகிறதோ அவர்களை, அந்த தீர்க்கதரிசிகளை 'தேவர்களாயிருக்கிறார்கள்' என்று உங்கள் பிரமாணங்களில் எழுதியிருக்கவில்லையா? அவர்கள் தேவர்கள் தான். நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே நீங்கள் என்னை கடிந்து கொள்ளலாமா?'' என்றார். 42 இந்த தேவ குமாரனில் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் தங்கியிருந்தது? அவரே தேவனின் வெளிப்பாடாயிருந்தார். தீர்க்கதரிசிகள் வார்த்தையின் ஒரு பாகமாக இருந்து, வரவிருக்கும் தேவனுடைய வார்த்தையாகிய பரிபூரணத்தை நோக்கி சுட்டிக் காட்டினார்கள். அது தான் அந்த தீர்க்கதரிசிகளின் கீழ் ஏற்பட்ட முடிவான பிரசவ வேதனை, வார்த்தையைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட கோட்பாடுகளும், முறைமைகளும் முடிவில் அழிந்த பின்பு வார்த்தையானவர் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் செய்தார். 43 தேவன் மாம்சமான வர்த்தமானம் யோசேப்பின் ஜீவியத்தில் எவ்வளவு அழகாக சித்தரிக்கப்பட்டது. யோசேப்பு தன் தகப்பனால் நேசிக்கப்பட்டு, எந்த ஒரு காரணமும் இல்லாமல் தன் சகோதரர்களால் வெறுக்கப்பட்டான். ஏனெனில் அவன் ஆவிக்குரியவனாக இருந்து, நிகழப்போகும் காரியங்களையும் சொப்பனங்களுக்கு அர்த்தம் கூறுகிறவனுமாயுமிருந்தான். அவ்விதமாக இருப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. ஏனெனில் அவன் அதற்கென்றே முன்குறிக்கப்பட்டு பிறந்தவனாயிருந்தான். முடிவில் அவன் ஏறத்தாழ 30 வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டு, சிறையிருப்பினின்று மீட்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் உயர்த்தப்பட்டான். சிறையிருப்பில் அவனோடு ஒரு சுயம்பாகியின் தலைவனும், ஒரு பானப்பாத்திரக்காரனும் இருந்தனர். இவர்களில் ஒருவன் மீட்கப்பட்டான், மற்றொருவனோ இழக்கப்பட்டான். இயேசுவும் தமது சிறையிருப்பாகிய சிலுவையில் இருந்தபோது, அவருடைய இருபக்கத்திலும் கள்வர்கள் அவரோடு கூட அறையப்பட்டனர். அவர்களில் ஒருவன் இரட்சிப்பைக் கண்டடைந்தான். மற்றொருவனோ மீட்பைக் காணாமற்போனான். பின்பு இயேசு பரலோகத்திற்கு ஏறெடுத்துக் கொள்ளப்பட்டு பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்தார். யோசேப்பு சிங்காசனத்திலிருந்து புறப்பட்டபோது எக்காளமானது தொனிக்கப்பட்டு, “தெண்டனிட்டுப் பணியுங்கள், யோசேப்பு வருகிறார்'' என்று கூறப்பட்டது. அதேவிதமாக இயேசு தமது சிங்காசனத்தினின்று புறப்படும் போது எக்காளமானது தொனிக்கப்பட்டு, எல்லா முழங்கால்களும் முடங்கட்டும், நாவுகள் யாவும் அவர் நாமத்தை அறிக்கையிடட்டும் என்று கூறப்படும். 44 ஆகவே, என்றாவது ஒருநாள் மகத்தான தேவ எக்காளம் தொனிக்கப் போகின்றது. அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். எல்லா நாவுகளும் இந்த வார்த்தைக்கென்று அறிக்கைச் செய்யும். அவர் எதற்காக இங்கு வருகிறார்? கவனியுங்கள், “அவர் வருகிறார், அவர் வருகிறார், அவர் வருகிறார்'' என்ற தொனியினை எக்காளமிட்ட தீர்க்கதரிசிகளின் வார்த்தையின் மூலம் ஏற்பட்ட பிரசவ வேதனையின் கீழ் அவள் மாம்சமான பரிபூரணமான வார்த்தையைக் கொண்டு வந்தாள். ஆனால் மல்கியாவிலிருந்து யோவான் வரைக்கும் 400 வருடங்களாக அவள் ஒரு தீர்க்கதரிசியையும் கொண்டிருக்கவில்லை; மாறாக வேதபாரகரையும், பரிசேயரையும், ரபிக்களையுமே அவள் பெற்றிருந்தாள். இதிலிருந்து அவள் எத்தகைய ஓர் பழுதடைந்த அமைப்பை பெற்றிருந்தாள் என்பதை நாம் அனுமானிக்க முடியும். கர்த்தர் சொல்லுகிறதாவது என்ற நேரிடையான செய்தி 400 வருட காலமாக அவளுக்கு தேவனிடத்தினின்று கிடைக்காமலிருந்தது. ஆகவே அன்றிருந்த ரபிக்களும், ஆசாரியர்களும் கேவலமானதொரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்டனர். 45 பின்பு மல்கியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் 3-ம் அதிகாரத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட எலியாவின் ஆவியுடையவனாக யோவான் ஸ்நானகன் வந்தான். மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டவன் அல்ல; மல்கியா 3-ம் அதிகாரத்தில் கூறப்பட்டவனே அவர்களுக்கு முதலில் அனுப்பப்பட்டான். இயேசுவும் மத்தேயு 11-ம் அதிகாரத்தில் இதையே குறிப்பிடுகிறார். ''கழுகின் கண்கள் மேல் படலம் பரவி பார்வை மங்கிற்று'' (பெம்பர்ட்டன் என்பவரின் ''ஆதி காலங்கள்“ என்ற நூலில் அவ்விதமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்) என்றதொரு நிலைமையாக யோவான் தன் சீஷர்களை இயேசுவிடம் அனுப்பி, ''வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?'' என்று அவரிடத்தில் கேட்கச் சொன்னான். கவனிக்கிறீர்களா? அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியத்தக்கதாக இயேசு, யோவானின் சீஷர்களை அந்த கூட்டத்தில் தங்கி கவனிக்கச் சொல்லிவிட்டு, பின்பு யோவானின் சீஷர்களை நோக்கி, ''நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள். என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்'' என்றார். யோவானின் சீஷர்களை இயேசு அனுப்பிவிட்டு, பின்பு தம்முடைய சீஷர்களையும், ஜனங்களையும் பார்த்து, ''எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரிக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்'' என்று கூறினார். வேறுவிதமாக கூறுவோமென்றால், வருத்தம் ஏற்படும் கடுஞ்சொற்களால் அங்கே இயேசு ஜனங்களை சாடினார். ''நீ இங்கு வந்து எங்கள் கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்; நாங்கள் உனக்கு நல்ல ஊதியம் தருகிறோம்'' என்றும், இதற்கு எதிராக அல்லது அதற்கு எதிராக நீ பேசாமலிருந்தால், நீ எங்கள் கூட்டத்தில் சேர்ந்துக் கொள்ளலாம்'' என்றும் யோவானிடம் அவர்கள் கூறியிருப்பார்களென்றால், அத்தகைய காரியத்திற்கு இணங்கக் கூடிய ஆள் யோவான் அல்ல பின்பும் இயேசு, “அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால் வருகிறவனாகிய எலியா இவன்தான்'' என்று கூறினார். மல்கியா 3:1ல் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலே இது. ஆனால் மல்கியா 4-ல் கூறப்பட்ட எலியாவைப் பற்றிய காரியம் வித்தியாசமானது. ஏனெனில் அவன் வந்த பின்பு இவ்வுலகமானது அக்கினிக்கிரையாக்கப்பட்டு, நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். 46 இப்பொழுது கவனியுங்கள், யோவான் ஸ்நானகனுடைய செய்தியானது ஜனங்களை அவர்கள் மத சம்பந்தமான தூக்கத்தினின்று தட்டி எழுப்பவில்லை. “அங்கு ஒரு பயித்தியக்காரன் இருக்கின்றான்; அவனை கடந்து சென்றுவிடுங்கள். ஏனெனில் அவன் ஜனங்களை தண்ணீரில் முழுக்க முயற்சிக்கிறான். அக்கிழவனிடம் ஒன்றுமில்லை. ஏன், உடுத்திக் கொள்வதற்கு சரியான துணிகளும் அவனிடத்தில் இல்லை. ஒரு ஆட்டுத்தோலை போர்த்தியிருக்கிறான். அவன் மிகவும் ஏழையாயிருக்கிறான். எந்த வேதப் பள்ளியினின்று இவன் வந்தான்? அடையாள ஐக்கியச் சீட்டு ஏதும் வைத்துள்ளானா? அவனுடைய கூட்டங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க கூட மாட்டோம். நாம் அவனை அங்கேயே பட்டினிக்கிடக்க விட்டுவிடுவோம்” என்றெல்லாம் கூறியிருப்பார்கள். கவனிக்கிறீர்களா? யோவானின் செய்தியினால் அன்றிருந்த உலக அமைப்பும் முறைமைகளும் வெகுவாக மாறிவிடவில்லை. அந்த நாட்களில் ஒரு மகன் தன் தகப்பனின் வழியில் நடக்க வேண்டுமென்ற ஒரு நடைமுறை இருந்தும், யோவான் அவ்விதம் நடக்கவில்லை. ஏன்? பரிசுத்த ஆவியானவர் கூறியிருந்தபடி மிக மகத்தான அவன் தன்னுடைய தகப்பனின் ஆசாரிய ஊழியத்தில் ஈடுபடவில்லை. காபிரியேலின் செய்தியினால் கொண்டு வரப்பட்ட மீதமானவர்கள் அங்கு யோவானுடைய ஊழியம் அவ்விதமாகத்தான் இருக்கும் என்பதை அறிந்துக் கொண்டனர். இந்த யோவான் ஸ்நானகன் தன் தகப்பனையும் தாயையும் இழந்த தனது ஒன்பதாவது வயதிலேயே வனாந்திரத்திற்குச் சென்றுவிட்டான் என்று நாமறிகிறோம். ஒரு வேளை அவன் அந்த பெரிய வேதப் பள்ளிக்கூடத்தில் இருந்திருப்பானென்றால் அங்கிருந்த மற்றவர்கள் அவனை நோக்கி, “ஏசாயா தீர்க்கதரிசி கூறினபடி மேசியாவின் வருகையை அறிவிக்கும் சத்தமாக நீ இருக்கப் போகிறாய், இங்குள்ள சகோ. ஜோன்ஸ் அவர்கள் அதைக் குறித்து கூறிய காரியங்கள் மிகவும் பொருந்தி போகிறதல்லவா?'' என்று கூறியிருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஒருவேளை அவன் எளிதாக தன் சம்மதத்தைக் கொடுத்திருக்கக் கூடும். ஆனால் அவனோ சரியான சத்தத்தை கேட்கத்தக்கதாக வனாந்திரத்திற்குச் சென்றான். அவர்களுடைய முறைமைகளில் ஒன்றையும் அவன் கற்றுக் கொள்ளவில்லை. அவனுடைய செய்தியானது மிகவும் முக்கியமானதாக இருந்தபடியால் அவன் வனாந்தித்திற்குச் சென்று அங்கே காத்திருந்தான். 47 கவனியுங்கள், அவனுடைய செய்தியானது ஒரு வேத சாஸ்திரியின் செய்தியைப் போன்றதில்லை. அவன் எல்லாவற்றையும் உதாரணப்படுத்தினான். ''விரியன் பாம்பின் குட்டிகளே'' என்று அந்தக் குருக்கள் கூட்டமாகிய பரிசேயரையும், சதுசேயரையும் பார்த்து அறை கூவினான். தான் வனாந்தரத்தில் பார்த்த மோசமான காரியங்களில் ஒன்றான பாம்பை (நழுவி ஓடத்தக்க ஒன்று) அவர்களுடைய அமைப்பிற்கு ஒப்பிட்டு பேசினான். அது தான் சரியான ஒப்புவமானம் என்று யோவான் நினைத்தான். ''விரியன் பாம்பின் சந்ததியே! வருங்கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைக்காட்டினவன் யார்? நாங்கள் இதைச் சேர்ந்தவர்கள், அதைச் சேர்ந்தவர்கள் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்றான் - வனாந்தரத்தில் ஓடும் ஓடையின் கரையில் தான் கண்ட சிறு கற்களை அதற்கு உவமானப்படுத்தினான். “கோடரியானது (வனாந்தரத்திலே அவன் உபயோகித்த ஒரு கருவி) மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது'' என்று தான் வனாந்தரத்திலே கண்டதை உவமானப்படுத்தினான். ”நல்ல கனிகொடாத மரமெல்லாம் (தனக்கு நெருப்பையுண்டாக்க மரம் எவ்விதம் கிடைத்தது என்பதை அவன் அறிந்திருந்தான்) வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்'' என்றான். கவனியுங்கள்; அவனுடைய செய்தி ஒரு வேத சாஸ்திரியின் செய்தியைப் போன்றிருக்கவில்லை. மாறாக வனாந்தரத்தில் காணப்பட்ட இயற்கையின்படி அவனுடைய செய்தி காணப்பட்டது. ஆனாலும் அவன் மேசியாவை அறிவிக்கத்தக்கதாக ஒரு செய்தியையுடையவனாக இருந்து, அச்செய்தியின் மேல் விசுவாசம் கொண்டவனாக, “அந்த மேசியா இப்பொழுது வரவேண்டும் - நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்; அவர் எனக்குப் பின் வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்'' என்று கூறினான். ''யோவானே, அவர் யார்?“ என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது'' என்று கூறினான். 48 ஆனால் ஒருநாள், ஒரு சாதாரணமான வாலிபன் அங்கே நடந்து யோர்தான் நதியினிடத்தில் வந்தார்; ஆசீர்வதிக்கப்பட்ட அந்த வயது சென்ற தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானகன் யோர்தானுக்கு அப்பால் பார்த்து இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!'' என்றான். “யோவானே, அவரை நீ எப்படி அறிவாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு யோவான், “ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை வனாந்தரத்தினின்று அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்கு சொல்லியிருந்தார்” என்று கூறினான். அவனுடைய செய்தியானது மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளினாலோ அல்லது வேத சாஸ்திர அடிப்படையிலோ வரவில்லை. அது தேவனிடத்திலிருந்து நேரடியாக அவனுக்கு வந்தது. அவனுடைய செய்தி அவர்களை அவ்வளவு அதிகமாக உலுக்கிவிடவில்லை. “அவர் மேல் ஆவியானவர் இறங்கி தங்கினதை பார்த்ததாக கூறினாயே, அதைக் குறித்து நான் சந்தேகிக்கிறேன். நானும் கூட அந்த ஞானஸ்நான ஆராதனையைக் கண்டேன். ஆனால் எனக்கு ஒன்றும் தென்படவில்லையே என்று அந்த ஆசாரியர்களும், மற்றவர்களும் கூறியிருப்பார்கள். ஆனால் அவன் அக்காட்சியைக் கண்டான் என்று இப்பொழுது நாமறிவோம். ஆனால் அவன் பார்த்ததாக அறிவித்த அக்காரியம் எத்தகையதாயிருந்தது என்பதை கவனித்தீர்களா? அவர்களுடைய தூக்கத்தினின்று அது ஒருபோதும் அவர்களை எழுப்பவில்லை. அவர்கள் அவனை கொண்டு சென்று அவன் தலையை வெட்டிப் போட்டார்கள். அவனுடைய செய்தி அவர்களை அசைக்கவில்லையென்பது உண்மைதான். 49 ஆனால் கர்த்தருடைய வருகைக்காக காத்திருந்து தங்களில் ஜீவனைப் பெற்றிருந்த மீதியானவர்கள், அந்த சிறு மந்தையை அவனுடைய செய்தியானது ஆட்கொண்டுவிட்டது. அன்னாள் மற்றும் சிமியோன், இன்னும் அங்கிருந்த சிறு கூட்டம், அவர்கள்எல்லாரும் கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அன்னாள், ஆலயத்தில் கர்த்தருக்கு ஜெபத்தில் சேவை செய்து வந்த அந்த குருடான தீர்க்கதரிசினி, ஒருநாள் அவள் ஆவிக்குள்ளான போது... சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனிதன், ''கர்த்தருடைய கிறிஸ்துவை நான் காணும் முன்பு மரணமடைய மாட்டேன் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறியிருக்கிறார்“ என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அவனுடைய இந்தக் காரியத்தைக் கேட்ட சில வேதபாரகர் ''பரிதாபத்திற்குரிய அந்த வயோதிபனுக்கு சற்று மூளை கலங்கிவிட்டது. அவருடைய ஒரு கால் மரணக்குழியின் சமீபமாகவும், மற்றொரு கால் தடுமாறியும் கொண்டிருக்கிறது, அவனை அவ்விதமே விட்டுவிடுங்கள். அவன் ஒரு நல்ல பண்புள்ள வயோதிபனாய் இருக்கின்றான். ஆனால் சற்று புத்திபிசகாயிருக்கிறது...'' என்றெல்லாம் கூறியிருப்பார்கள். கவனியுங்கள், அவன் பெற்றிருந்தது என்ன? பரிசுத்த ஆவியினால் அவனுக்கு அது வெளிப்படுத்தப்பட்டிருந்ததே அவன் பெற்றக் காரியமாகும். இந்த மதிய நேரத்திலும், உங்களுக்கும் அவ்விதமே அது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறார். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்க சபைகளை சேர்ந்த குருக்கள் எல்லோரும் இங்கு வந்திருப்பதை பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் தாம் அவர்களை இங்கு அழைத்து வந்திருக்கிறார். அவர்கள் பரிசுத்த ஆவியால் அசைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த மணி நேரம் இங்கிருக்கின்றது. ஆதலால் தான் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது அசைவாடினார், அவர்களும் பசி கொண்டு அதற்காக நோக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சடிதியாக 50 அந்த நாளிலே, உங்களுக்குத் தெரியுமா, தொலைக்காட்சி (TV) பெட்டி அவர்களிடையே இல்லாதிருந்தது. அந்த நாளிற்காக காத்திருக்கு நன்றி. அப்பொழுது அவர்கள் யூதேயாவின் மலைப் பகுதியில் இருந்தனர். அச்சமயம் ஒரு நட்சத்திரம் தோன்றியது, ஒரு குழந்தை பிறந்தது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. எட்டு நாளைக்குப் பின்பு அப்பிள்ளையின் தாயார் பிள்ளையை ஒரு கந்தை துணியில் சுற்றி அங்கு எடுத்து வந்திருந்தார். குழந்தைக்கு போர்த்த ஒன்றுமே அவர்களிடத்தில் இல்லாதிருந்தது. காளை மாட்டின் நுகத்தடியினை வைக்கும் சிறு துணியினால் அக்குழந்தையை சுற்றினார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். இவ்விதமான நிலைமையோடு யோசேப்பும், மரியாளும் குழந்தையாகிய இயேசுவை அங்கு தேவாலயத்திற்குக் கொண்டு வந்தார்கள். பின்னல்களால் ஆகிய அழகிய துணிகளில் தங்கள் குழந்தைகளை சுற்றியிருந்த தாய்மார்கள் அங்கு தூரத்தில் நின்றுகொண்டு, ''அதோ அங்கே பார் அந்த மரியாள் வருகிறாள்“. ''விவாகமாவதற்கு முன்பே அவள் அந்த மனிதனால் கர்ப்பவதியானாள், அவளை விட்டுதூர விலகுங்கள்” என்றெல்லாம் கூறியிருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் இன்று வரை அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மரியாள் அப்பிள்ளையை தன் கைகளில் சுமந்தவளாய் அங்கு வந்தாள். அவர்களுடைய எண்ணங்களும், பேச்சுகளும் அவளுக்கு எந்தவித வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. அது யாருடைய குமாரன் என்று அவள் அறிந்திருந்தாள்! 51 அது போன்றே வார்த்தையை தன் இருதயத்தில் ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு விசுவாசியும் காணப்படுகின்றான்! ஸ்தாபனங்கள் என்ன கூறினாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை, அது என்னவென்று நீ அறிந்திருக்கிறாய். அவருடைய வல்லமையினால் நீ நிழலிடப்பட்டபோது பரிசுத்த ஆவியானவர் அதை உனக்கு வெளிப்படுத்தித் தந்தார். அதுவே காரியம். வனாந்தரத்தின் பின் பகுதியில் தேவனையும் எறிகிற முட் புதரையும் சந்திக்கும் வரை எந்த மனிதனுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உரிமையில்லை. உன்னிலுள்ள அந்த அனுபவத்தை எடுத்துப் போடத் தக்கதான, இவ்வுலகின் மத சம்பந்தப்பட்ட கோட்பாடுகளின் வியாக்கியானம் என்று ஒன்று அவ்வனாந்திரத்தில் இல்லை. நீ அங்கே இருந்தாய்; அது உனக்கு சம்பவித்தது. அதைக் குறித்து மற்ற அமைப்புகள் என்ன கூறினாலும், அதைப் பற்றி எனக்கு எந்தவித கவலையுமில்லை. நீயே அதற்கு சாட்சியாயிருக்கிறாய்! அல்லேலூயா! நீ நீக்ரோ மனிதன், ''என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இந்த இடம் போதாது என்று கூறிய வண்ணம், அந்த உண்மையை நான் நினைக்கும் போது, இப்பொழுது மிகவும் பக்தி வசப்படுகிறேன். தேவனே தம்மை உனக்கு வெளிப்படுத்தினார். 52 சிமியோன் வாக்குத்தத்தைப் பெற்றவனாக அன்று காலை அங்கு அமர்ந்துக் கொண்டு ஆராய்ந்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு காலையும் அங்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொண்டு வரப்படுவர் என்று நான் நினைக்கிறேன். ஏறத்தாழ இரண்டே கால் கோடி யூத ஜனங்கள் வாழும் அத்தேசத்தில் அநேகக் குழந்தைகள் பிறந்து ஒவ்வொரு எட்டாம் நாளின் சுத்திகரிப்பிலும் காணிக்கைச் செலுத்தும் படி தாய்மார்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்தனர். இங்கே சிமியோன் அமர்ந்தவாறு, ஒருவேளை ஏசாயாவின் சுருளைப் படித்துக் கொண்டிருந்திருக்கக் கூடும். எனக்குத் தெரியாது. ஆனால் சடுதியில் அங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இப்பொழுது கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் ஒரு வாக்குத்தத்தத்தை உங்களுக்குச் செய்திருந்தாரானால் காக்கும் பொறுப்பு பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்ததாகும் - அது உண்மையாகவே தேவனாக இருக்குமானால். ஒரு மனிதன் வந்து ஒரு காரியத்தைக் கூறி அதை தேவன் நிறைவேற்றவில்லையென்றால், அது ஆரம்பத்திலேயே தேவனுடைய வார்த்தையாக இருக்கவில்லை என்று அர்த்தம். ஆகவே அதைக் குறித்து மறந்து விடுவதுதான் உத்தமம். அவன் மேலும் அதுதான் சரியென்று கூறியும், தேவன் அதை இன்னமுமாக நிரூபிக்கவில்லையென்றால், அது தவறாகவேயிருக்கிறது என்று பொருள். ஏனெனில் தேவன் தம்முடைய செய்திக்கு வியாக்கியானம் அளிப்பவராக இருக்கின்றார். அவரே தமது வார்த்தைக்கு வியாக்கியானியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அது நிறைவேறும். ஆகவே தேவன் அவருக்கு செவிகொடுக்கச் சொல்கிறார். ஏனெனில் அது சத்தியமாயிருக்கின்றது. அவர் ஏதாகிலும் ஒன்றை கூறி அது நிறை வேறுமானால் அதுவே அதற்கு சாட்சியாயிருக்கிறது. ஒவ்வொரு நேரமும் அதுவே சத்தியமாயிருக்கின்றது. ஏனெனில் தேவன் பொய்களை கூறுபவரல்ல. 53 இந்த சிமியோன் அங்கு அமர்ந்தவனாய் வார்த்தையின் நிமித்தம் உண்டான உபத்திரவத்தையுடையவனாகக் காணப்பட்டான். அந்நாளில் இஸ்ரவேலரில் காணப்பட்ட மீதமான விசுவாசிகளில் அவனும் ஒருவனாயிருந்தான். யோவான் ஸ்நானகன் வருவான் என்பதை அறிந்தவனாக அவன் அங்கே அமர்ந்திருந்தான். ஏனெனில், அந்த யோவானும் இஸ்ரவேலில் மீதமான விசுவாசிகளின் ஒரு பாகமாயிருந்தான் என்ற வார்த்தை அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அந்த குழந்தையை அவர்கள் தேவாலயத்திற்குள் கொண்டு வந்தபோது அது அங்கே வந்திருக்கின்றது என்பதை அவனுக்கு வெளிப்படுத்துவது பரிசுத்த ஆவியின் கடமையாயிருந்தது. அவன் பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டு, தன்னுடைய சிறிய வேத வாசிப்பு அறையிலிருந்து வெளிவந்து, பிரதான அறையினூடாகக் கடந்து வந்து, பெண்கள் வரிசையாக நிற்குமிடத்தில் வந்து, வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்து, எல்லோராலும் ஒதுக்கப்பட்டவளாய் தனியாக நின்றுக் கொண்டிருந்த மரியாளின் இடமாக வந்து, அவள் கைகளிலிருந்த குழந்தையை தன் கரங்களில் ஏந்தி, ''ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்; உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது?'' என்று கூறினான். அந்த சமயத்தில் அங்கு முன் குறிக்கப்பட்டவளாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசினி அங்கு வயதான ஒரு ஸ்திரீயாய் கண்பார்வை மங்கினவளாக அங்கு அமர்ந்திருந்தாள். அங்கு தேவாலயத்தின் உள்ளேயும், வெளியேயும் கூட்டமாய் நின்றிருந்த எல்லாப் பெண்கள் மத்தியிலும், கிறிஸ்து என்னும் குழந்தையினிடமாக நேராக அவள் வழி நடத்தப்பட்டாள். ஒரு குருடான பெண்மணியை தேவன் தம்மிடம் வழிநடத்தக் கூடுமானால், ஒரு பெந்தேகோஸ்தே கூட்டமாகிய நீங்கள், உங்கள் கண் பார்வையைப் பெற்றுக் கொள்ளத் தக்கதான காரியத்தைப் பற்றியென்ன! இதற்கு மேல் நான் போகவில்லை; அதற்கு மேலான காரியத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கவனியுங்கள், ஓ, சபையானது எவ்வளவு இழிவான ஓர் நிலைமையில் திரும்பவும் வந்துவிட்டது. அந்த நாளிலும் அது அவ்விதமாகவேயிருந்திருக்கக் கூடும், ஆனால் சிறுபான்மையான அந்த மீந்தவர்களுக்கோ ஒரு புகலிடம் உண்டாயிருந்தது. 54 இப்பொழுது நாம் திறந்த மனதோடு காரியத்தைப் பார்ப்போம். சபையானது அந்த நிலைமையில் இருக்க நாம் காண்போமானால், முன்பு சம்பவித்த ஒரு சூழ்நிலையில் நாம் திரும்பவர வேண்டுமல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) வேதாகமத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட காரியங்கள் இன்றைக்கு சபையில் நடந்து கொண்டிருக்கிறதா என்பதை பாருங்கள். உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கையில் அது மிகவும் சமீபித்து இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம். இப்பொழுது சபையைக் குறித்துப் பார்ப்பாம். லூத்தரின் கீழ் அவள் (சபை) பிரசவ வேதனையுற்றாள். வெளிப்படுத்தின விசேஷத்தின்படி ஏழு சபை காலங்களிலும், அந்த சபை காலங்களிற்குரிய ஏழு செய்தியாளர்களும் உண்டாயிருந்தனர் என்று நாம் அறிவோம். லூத்தர் என்பவர் வரவேண்டிய சமயத்தில் சபையானது பிரசவ வேதனையில் தூக்கியெறியப்பட்டு லூத்தரை அது பெற்றெடுத்தது. அது உண்மை. அதன் பின்பு அது திரும்பவும் வேதனையுற்று, வெஸ்லி என்பவரை பெற்றெடுத்தது. திரும்பவும் பிரசவ வேதனையுற்று, பெந்தேகோஸ்தேயை பெற்றெடுத்தது. அவர்கள் ஒவ்வொருவரும் (தங்கள் தங்கள் காலத்தின் செய்தியாளர்கள்) வேதத்தில் கூறப்பட்டபடி தங்கள் செய்தியினால் உலுக்கி வார்த்தைக்கு ஜனங்களை திரும்பச் செய்தனர். வெளிப்படுத்தின விசேஷம் முதல் நான்கு அதிகாரங்களைப் பற்றியதான விரிவுரை அடங்கிய புஸ்தகமானது துரிதமாக உங்களுக்கு வெளியிடப்படும். லூத்தரின் செய்தி “நீதிமானாக்குதல் என்பதையும், வெஸ்லியின் செய்தியான பரிசுத்தமாக்குதலும், அதை, தொடர்ந்து வந்த பெந்தேகோஸ்தேயும் எவ்விதம் இயற்கையில் ஏற்படும் சம்பவத்திற்கு ஒத்திருக்கிறது என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் அவ்விரிவுரை நிரூபிக்கிறதாயிருக்கின்றது. 55 இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு சபை காலமும் சபையை உலுக்கி அதற்கு பிரசவ வேதனையை அளித்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? பிரசவ வேதனையின் பிற்பாடு வார்த்தையோடு கூட செல்வதை அவர்கள் தவிர்த்து, தங்களுக்கென்று ஒரு கூட்ட மனிதர்களை சேர்த்துக் கொண்டு முதலாமவர் செய்தது போன்று இவர்களும் செய்துவிட்டனர். அதுதான் சரியாக சம்பவித்தது. அப்போஸ்தலர்களின் அசைவிற்குப் பின்பு சபையானவள் திரும்பவும் பின்வாங்கிச் சென்றுவிட்டாள். அதன் பின்பு அகபு (Agabus) போன்ற சீர்திருத்தக்காரர்கள், அச்சமயத்தில் தோன்றினர். ஒவ்வொரு காலமும் ('நிசாயாவின் ஆலோசனை சங்கத்திற்கு முன்' என்ற புஸ்தகத்தையும், 'நிசாயாவின் தகப்பன்மார்கள்' என்ற புஸ்தகத்தையும், நீங்கள் படித்தால் அச்சமயம் நடந்தக் கரியங்களை புரிந்துக் கொள்ளலாம்) பிரசவ வேதனையுற்று, “கர்த்தர் சொல்லுகிறதாவது'' என்று உரைக்கின்ற செய்தியாளர்களை அவரவர்களின் சபைக் காலத்தில் பெற்றெடுத்தது. இப்பொழுதோ, வேத வாக்கியங்களின்படி எப்போதும் இல்லாத அளவிற்கு அவள் அவ்வளவாய் இழிவான நிலையில் காணப்படுகின்றாள். லவோதிக்கேயா சபையின் காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இச்சபையின் காலம் ஐசுவரியமுள்ளதாயிருந்தாலும், தான் குருடாயிருப்பதை அறியாமலிருக்கின்றது! லவோதிக்கேயா சபையைத்தவிர வேறு எந்த சபையும் கிறிஸ்துவை சபைக்கு வெளியே தள்ளினதாக வேதாகமத்தில் சான்றில்லை. அவள் மிகவும் பழுதடைந்து இழிவான நிலையில் காணப்படுகின்றாள். “எனக்கு ஒரு குறைவுமில்லை நான் அரசியை போல் அமர்ந்திருக்கிறேன், '' நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்தினும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய்.'' ஆம், ஐயா. அதுதான் நிலைமை. ''நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்கு கலிக்கத்தை என்னிடத்தில் வந்து வாங்கிக் கொள்'' என்று வேதம் கூறுகிறது. தேவன் உரைத்ததை பார்க்கத்தக்கதாக சபைக்கு விருப்பமிருந்தால் தேவனுடைய கலிக்கம் சபைக்கு நிச்சயமாக வெளிச்சத்தைக் கொண்டு வரும். 56 இப்பொழுது சீக்கிரமாக கவனியுங்கள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவள் இருக்கிறாள் என்பதற்கு எந்த விதமானதொரு சந்தேகத்தின் நிழலுமில்லை. நாம் லவோதிக்கேயா சபை காலத்தில் இருக்கிறோம். அவளுடைய செய்தியாளன் மல்கியா 4-ம் அதிகாரத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறான். அவனுடைய செய்தி ஜனங்களை வார்த்தைக்குத் திரும்பக் கொண்டு வரும். வார்த்தையை திரும்பக் கொண்டு வரும் என்று அவர் வாக்குரைத்திருக்கிறார். மல்கியா 4-ம் அதிகாரத்தின்படி அவள் ஒரு புதிய பிறப்பைக் கொண்டு வருவாள். இன்றிருக்கும் சபை உலகத்தில் இரண்டு அமைப்புகள் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான் கூறப் போவதற்கு நீங்கள் ''ஆமென்'' என்று சொல்லுகிறீர்களா என்பதை பார்ப்பதற்கு விருப்பமாயுள்ளேன். இரண்டு அமைப்புகள் இன்று சபை உலகத்தில் கிரியையில் காணப்படுகின்றன. (என் தோள்களின் மேலுள்ள இந்த பாரத்தை நான் இறக்கிவிடப் போகிறேன்; அவ்விதம் நான் செய்வேனானால் என் வேலை முடிந்துவிடும்). தேவனுடைய வார்த்தையையும், ஸ்தாபனமுமே அவ்விரண்டு முறைமைகள் என்பதை நாமெல்லோரும் அறிவோம். யாக்கோபும், ஏசாவும் போன்று இந்த இரண்டு அமைப்புகளும் கிரியையில் காணப்படுகின்றன. யாக்கோபு ஆவிக்குரியவனாகவும், ஏசா மாம்சத்திற்குரியவனாகவும் காணப்பட்டனர். அதன் தார்ப்பரியம் என்ன?ஏசாவும், யாக்கோபும் அவர்கள் பிறப்பதற்கு முன்பே தங்கள் தாயின் கர்ப்பத்தில் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் போராடினர். அதைப் போலவே ஸ்தாபனத்தாரும், வார்த்தையைச் சார்ந்தவர்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் போராடுகின்றனர். லூத்தரின் சீர்திருத்தக் காலந்தொடங்கி அவர்கள் அவ்விதம் போரிட்டு வருகின்றனர். நீங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு அது எளிமையாயிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இங்கிருக்கும் மனிதர்கள், நான் கூறுபவற்றை எடுத்துக் கொள்வார்களென்றால், அதைக் கொண்டு அதிக ஞானத்தை பெருக்கிக் கொள்வார்கள். ஆகவே தான் நான் இந்த வித்தை இங்கு விதைக்க விரும்புகிறேன். அவர்கள்அதற்கு ஜீவனூட்டி கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். கவனியுங்கள். 57 எல்லா சமயங்களிலும் அது அவ்விதமாகத் தான் இருந்தது. அவளுக்குள்ளே போராட்டம் இருந்த காரணத்தினால்தான் அவள் பிரசவ வேதனையை பெற்றிருப்பவளாகக் காணப்பட்டாள்! அங்கே ஏசா என்ற ஒருவன் இருந்தான். இவன் பயபக்தியுள்ளவனும், சன்மார்க்கனும், சுத்தமுள்ளவனும் நானறிந்தவரை இவன் நல்லவனுமாயிருந்தான்; ஆனால் புத்திர சுவிகாரம் என்பதைப் பற்றி ஒன்றும் அறியாதவனாயிருந்தான் அவன் அந்த விதமாகவே பிறந்து, உருவமைக்கப்பட்டிருந்தான். இந்த யாக்கோபைக் குறித்தென்ன? அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. அவனிடம் இருந்த ஒரு தன்மை, அவன் அந்த புத்திர சுவிகாரத்தை விரும்பினதேயாகும்! அவன் ஆவிக்குரியவனாக இருந்தான். இந்த இரண்டு பேரும் இன்றுள்ள சபையின் கர்ப்பத்தில் காணப்படுகின்றனர். உலக சபைகளின் ஆலோசனை சங்கம் என்றதொருமகத்தான அமைப்பானது உருவாக முயற்சிக்கின்றது. சபையின் கர்ப்பத்தினின்று இரண்டு பிள்ளைகள் வந்து கொண்டிருக்கின்றன. என்னுடைய இந்த வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! வார்த்தையானது, வார்த்தை மணவாட்டி சபையை சபை நிச்சயமாகப் பெற்றெடுக்க வேண்டும். கிறிஸ்துவுக்கென்று மணவாட்டியை சபையானது பிரசவிக்கத்தான் வேண்டும். எல்லாக் காலங்களிலும் வார்த்தைக்கென்று வெளி வந்து நித்திரையாயிருக்கிறவர்கள் மணவாட்டியாக உருவாக்கப்பட்டு, கர்ப்பத்தில் பாதங்கள் தலைக்கு வருவது போல் வந்து அவள் பெருக்கமாகி, சரீரம் பெருகுவதுபோல, கிறிஸ்துவின் சரீரமும் பெருகி, முடிவில் தலையானது அதிலே பொருத்தப்படும். தலையினிடத்தில் தான் எல்லாமும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இழுப்பதோ, அல்லது திருப்புவதோ எல்லாவற்றையும் இந்த தலைதான் செய்கின்றது. 58 ஆனால் இந்த ஸ்தாபன அமைப்புகள் அதிலிருந்து வளராது. ஏனெனில் அது ஒரு மனித கோட்பாடினால் நடக்கும் அமைப்பாயிருக்கின்றது. ஒரு களையான செடி ஒரு கூட்ட கோதுமை மணிகளை பிறப்பிக்க முடியாது. ஆனாலும் களையும் கோதுமை மணியும் ஒரே நிலத்தில் காணப்பட்டு, ஒரே மழையைக் குடித்து, ஒரே சூரிய வெளிச்சத்தை அனுபவிக்கின்றன. ஒன்று வார்த்தையாயிருக்கின்றது; மற்றொன்றோ வார்த்தைக்குப் புறம்பாயிருக்கின்றது. இந்த இருவரும் சீர்த்திருத்தக் காலம் தொடங்கி இன்று வரை சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் அக்காரியத்தை நான் பேச வேண்டுவதில்லை. இல்லையா? நான் எதை கூறுகிறேன் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருக்கிறீர்கள் - எந்த அமைப்பினுள் நீ இருக்கிறாய்? இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். தேவனுடைய தீர்க்கதரிசிகள் வார்த்தையினால் உலுக்கிய அவர்கள் காலங்களில் நீ வாழ்ந்திருப்பாயானால் எந்த பக்கம் சார்ந்தவனாயிருந்திருப்பாய்? இன்றைக்கும் அதே விதமான தெரிந்து கொள்ளுதலில் தான் நீ காணப்படுகின்றாய். சபையானது பரிபூரணமான வார்த்தையை பிரசவிக்க வேண்டிய தருணத்தில் காணப்படுகின்றது. வார்த்தை மணவாட்டிக்காக வார்த்தை (சபையர் “ஆமென்” என்கின்றனர் - அசி) ஆம் ஐயா, பாருங்கள். ஒரு அமைப்பு - புரிகின்றதா வருகின்றது. ஒரு ஸ்திரீ ஒரு மனிதனின் பாகமாயிருப்பது போல (அவனிலிருந்து அவள் எடுக்கப்பட்டாள்). சபையும் கூட வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையோடும் சார்ந்திருக்கிற சபையாயிருக்க வேண்டும் கோட்பாடுகளையோ மனித முறைமைகளையோ அத்துடன் கூட்டக் கூடாது. அது கறைபடாத, சுத்தமான வார்த்தை கன்னியாக இருத்தல் வேண்டும்! அதுதான் உண்மை! லூத்தரின் வெளிச்சத்தின் நாட்களிலே, சபையானது தாழிட்டு அடைபட்டிருந்த போது, லூத்தர் முட்டித் தள்ளினார். அவள் பிரசவ வலிக்குள்ளாகச் சென்றாள், அப்பொழுது - லூத்தர் வெளிவந்து - “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்! இது அந்த இராப்போஜனம் அல்ல'' என்றார். வெஸ்லியின் நாட்களில் அவள் மறுபடியுமாக பிரசவ வலிக்குள்ளாக சென்றாள், அப்பொழுது வெஸ்லி பிறந்தார்! ஆனால் அவர் என்ன செய்தார்? அவருடைய தாய் என்ன செய்தாளோ அதையே திரும்பவும் அவரும் செய்தார். பின்பு பெந்தெகொஸ்தேயின் நாட்களிலே உங்களுடைய தகப்பன்மார்களும், தாய்மார்களும் அந்த காரியத்தை விட்டு வெளியே வந்து அதை வெறுத்தனர். அவர்கள் தங்கள் கால்களில் காலுறைகளும் கூட இல்லாமல் அங்கே வீதிகளில் சென்று, ஒரு பழைய தகர டப்பாவையும், கிட்டாரையும் வாசித்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தனர். வீதிகளின் முனைகளிலும், பாதைகளிலும் நின்று பிரசங்கித்தனர். சிறைச் சாலைகளில் இரவு முழுவதும் இருந்தனர். ஆனால் இப்பொழுதோ நாம் மிகவும் குளிர்ந்து போனவர்களாகி திரும்பவும் ஸ்தாபனத்திற்குள் சென்று, நாம் எந்த குழியினின்று வந்தோமோ அக்குழிக்கே திரும்பவும் சென்றுவிட்டோம்! மரித்த உங்கள் பரிசுத்தமான முன்னோர்கள் கல்லறையினின்று எழும்பி வருவார்களென்றால், உங்களைக் குறித்து வெட்கப்படுவார்கள்! இது மிகவும் கடினமான வார்த்தையென்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதுவே சத்தியமாகும். (சபையார் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி) 59 ''நீங்கள் ஜனங்களை நேசிக்கிறீர்கள் என்றல்லவா நினைத்தோம்'', என்று நீங்கள் கூறலாம். அன்பானது திருத்தக் கூடியதாக இல்லாவிட்டால், பின்பு அன்பை நீங்கள் எவ்வாறு உற்பத்தி செய்யக்கூடும்? அன்பு திருத்துகிறதாயிருக்கிறது. நான் நேசிக்கிறேனா..? நான் தேவனுடைய சபைக்காக பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். இந்த அமைப்புகள், கோட்பாடுகளின் கீழ் சபையைக் கூட்டி அதை பழுதடைந்து போகச் செய்கிறதான காரியத்தைக் காண்கையில் தம்முடைய வார்த்தையை தேவன் சத்தியமென்று உரைக்கிறார். இருந்தாலும், இன்னுமாக அவர்கள் அதிலே நிலைக் கொண்டிருக்கிறார்கள்! ஆமென்! அது உண்மை. சகோதர சகோதரிகளே, அது உண்மையென்று நீங்கள் அறிவீர்கள். ('ஆமென்') அதை அறிவிக்கிறதற்கான எளிமையான வழி அதுதான். மூலமொழியாகிய கிரேக்க மொழி மற்றும் பலவற்றை பிரித்து ஆழ்ந்து நோக்குவதல்ல காரியம், சரியான புத்தியை தெளிவிக்கிறதுதான் காரியம். அதை நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ளக் கூடும். இரண்டும் இரண்டும் நாலு என்பது போல்... அது சத்தியம் என்பதை நாமறிந்திருக்கிறோம். நிச்சயமாக மணவாட்டியைப் பிறப்பிக்க வேண்டும். 60 அதே சமயத்தில் தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்ற ஏசாைைவப் போன்று, பழைய அமைப்பானது தன்னுடைய அடையாளத்தைக் கொண்டிருந்து ஒரு ஏசாவைப் பிறப்பிக்க வேண்டும். நான் பயித்தியம் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஆனால் அப்படி நான் பயித்தியமானால், என்னை தனியே விட்டுவிடுங்கள். இந்த வழியில் நான் நல்ல விதமாக உணருகிறேன். அந்த மற்ற வழியிலிருப்பதைக் காட்டிலும் இந்த வழியில் இருப்பதை நலம் என நான் கருதுகிறேன். இவ்வுலகத்திற்கு ஒருவேளை நான் பயித்தியமாக இருக்கக் கூடும். அனால் நான் எங்கு நிற்கிறேன் என்பதை அறிந்தவனாயிருக்கிறேன். கவனியுங்கள். ஒரு மரித்த குழந்தையை அது பிறப்பிக்கப் போகின்றது. வேத சாஸ்திர அமைப்பானது எல்லா ஸ்தாபனங்களையும் ஒன்று சேர்த்து யாக்கோபை வெறுத்த ஒரு ஏசாவை பிறப்பிக்கப் போகின்றது! ஆமென், நீங்கள் இதை காண்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மரித்துப் பிறந்த, மரித்த ஸ்தாபனம் எல்லாம் ஒன்றாகச் செல்கின்றது. ஓ, வார்த்தையின் விசுவாசிகளே, என்னுடைய செய்திக்குள் வாருங்கள்! எனக்கு செவிகொடுங்கள் - என்னுடைய செய்திக்கல்ல - சத்தியம் இதுதான் என்று நிச்சயமாக அறிக்கையிடும் அவருடைய செய்திக்கே செவி கொடுங்கள். நீங்கள் ஏதாவதொன்றை இதிலிருந்து தெரிந்துக் கொள்ளத்தான் வேண்டும். இதன் பிறகும் நீங்கள் வெறுமனே அமர்ந்திருக்க இயலாது. உங்களுடைய தேர்தெடுத்தலை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். 61 அன்றொரு நாள் நாம் மேற்கு பாகத்திலிருந்த போது, கோதுமைச் செடியைக் குறித்த உவமையை விளக்கிக் காட்ட கர்த்தர் என்னை அனுமதித்ததை நீங்கள் ஞாபகம் கொள்கிறீர்களா? லூத்தரின் மூலமாக வெஸ்லியும், பின்பு பட்டுக் குஞ்சம், பல சிறிய கிளைகளும் அங்கு காணப்பட்டன. விதையினுடைய தண்டானது ஒவ்வொரு சபையையும் குறிக்கிறதாயிருந்தது, பின்பு கதிர் இருக்குமிடம் வரும்போது, அங்கே சிறு கதிரை மூடின பதர் காணப்பட்டது - அது பார்வைக்கு கோதுமை மணியைப் போன்றே சரியாகக் காணப்பட்டது. கோதுமைச் செடியைக் குறித்து சரியாக உங்களுக்குத் தெரியவில்லையென்றால், நீங்கள் அந்த பதரை காணும்போது ''அதோ கோதுமை மணி வந்துவிட்டது'' என்று தான் கூறுவீர்கள் - ஆனால் அது ஒரு பதராயிருக்கின்றது. அந்த பதரை திறந்து பார்ப்பீர்களென்றால், அதினுள் கோதுமை மணி இராது. அதன் உள்ளே எங்கோ ஓர் மூலையினின்று சிறிய மொக்கு கிளம்பி வருகிறதாயிருக்கும். அதைப் பார்க்க வேண்டுமானால் அணுப் பரிமாண கண்ணாடியின் (Micro Scope) மூலமாகத்தான் பார்க்கவேண்டும். பெந்தேகோஸ்தே முதலில் வந்த போது, இயேசு மத்தேயு 24:24-ல் கூறினபடி கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யத் தக்கதாக அவ்வளவு நெருக்கமாகக் காணப்பட்டது. பதர் செய்த காரியம் என்ன? கோதுமை மணியை தாங்குகிற ஒரு மூடியாயிருந்தது. அது சரியா? இலை அரும்புகளும், பட்டு குஞ்சமும் கோதுமை மணியைப் போன்றிருக்கவில்லை; ஆனால் இவைகள் சிறிதளவு அதன் சாயலைக் காட்டினாலும், இந்த பதரான மூடியோ கோதுமை மணியைப் போன்றே காணப்பட்டது. இருந்தாலும் அது கோதுமை மணியை சுமக்கிற ஒரு கருவியாகக் காணப்பட்டதேயன்றி அது கோதுமை மணியல்ல. 62 அந்த செய்திகள் எவ்விதமான பிரசவ வேதனையோடு வந்தன என்பதை கவனித்தீர்களா? அடுத்த காலத்தின் செய்தியைக் கொண்டு வரத்தக்கதாக ஜீவனானது கடந்து மேலே சென்றது. லூத்தரின் செய்தியினின்று ஜீவனானது கடந்து சென்று வெஸ்லியின் செய்திக்கும், வெஸ்லியின் செய்தியினின்று பெந்தெகொஸ்தே செய்திக்கும் தொடர்ந்து சென்றது. இப்பொழுதோ அந்த ஜீவன் பதரான மூடியைக் கடந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் தார்ப்பரியம் என்ன?இயற்கையின் ஒவ்வொரு பருவத்தின் தோற்றமும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆவிக்குரிய காரியங்களை சத்தியம் என்று பறைசாற்றுகின்றது. நீங்கள் என்னை பயித்தியக்காரன் என்று நினைக்கலாம். ஒருவேளை அப்படியே இருக்கட்டும் (நான் ஏற்கனவே கூறியபடி) ஆனால் ஏதோ ஒன்று என்னில் இருக்கின்ற காரணத்தினால், அதை என்னால் நிறுத்த முடியவில்லை. என்னுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலினால் அது வரவில்லை. அது தேவனாயிருக்கின்றது! அவர் அதை உறுதிப்படுத்துகின்றார், அதுதான் சத்தியமாக்க, அது சதத்தியம் என்பதை நிருபிக்கின்றார். லூத்தர், வெஸ்லி, பெந்தேகோஸ்தேயினர், பாப்டிஸ்டு அல்லது வேறு யாரோடும், அவர்களை விரோதிக்கத்தக்கதான காரியம் என்னிடத்தில் எதுவும் இல்லை. ஸ்தாபன அமைப்புகளுக்கு எதிராகவே நான் அறை கூவுகிறேன். ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது அவைகளுக்கு எதிராக இருக்கின்றது. எந்த ஒரு தனி மனிதன் மேலும் எனக்கு விரோத மனப்பான்மையில்லை! இன்று இங்கு அமர்ந்திருக்கும் போதகர்களையும், வேதசாஸ்திரிகளையும் பாருங்கள். அவர்கள் ஸ்தாபன அமைப்புகளுக்கு செவி கொடுத்திருப்பார்களேயானால் இன்று இங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் தேவ வார்த்தையைக் குறித்ததான பொதுவான துணிவு அவர்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் வெளியே வந்து அதை எற்றுக் கொண்டுள்ளனர்! அல்லேலூயா! - என்பதற்கு நம் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று அர்த்தம். நான் கூறினது உங்களை புண்படுத்தாது என நினைக்கிறேன். ஆமென்! என்பதற்கு அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம். நான் அதை சத்தியம் என்று அறிந்து விசுவாசிக்கிறேன் என்றாவது ஒருநாள் இது சத்தியம்தான் என்று நீங்கள் உணருவீர்கள் - ஒருவேளை அப்பொழுது காலமானது மிகவும் கடந்துவிட்டிருக்கும். இப்பொழுது கவனியுங்கள், கவனியுங்கள். 63 காலத்தின் முடிவில் மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினாள் என்று வேதம் கூறுகிறது. அவருடைய மனைவியாவதற்கு அவள் எவ்விதம் ஆயத்தப்படுத்தினாள்?எத்தகைய வஸ்திரத்தை அவள் தரித்திருக்கிறாள்? அவருடைய வார்த்தையென்னும் நீதியின் வஸ்திரத்தினால் அவள் தன்னை உடுத்தியிருக்கிறாள். நான் தரிசனத்தில் பார்த்ததும் அவ்வாறே இருந்தது. பாருங்கள்? கவனியுங்கள், நான் முடிக்கும் முன்பு இந்த ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். இதை கூறும்படியாக என்னை நடத்தினது அதுதான். இப்பொழுது இது “கர்த்தர் சொல்லுகிறதாவது” ஒரு மனிதன் தன் சொந்த எண்ணத்தினால் அவ்விதம் கூறுவானென்றால் அவன் ஒரு மாய்மாலக்காரனும், நரகத்திற்கு பாத்திரனுமாயிருக்கிறான். அது உண்மை. இவ்விதமாக ஒரு கூட்டம் நல்ல ஜனங்களை அவன் கூட்டி அவர்களை ஏமாற்றுவானென்றால், மாமிச கோலம் எடுத்த பிசாசு என்று அவனை அழைக்கலாம். தேவன் ஒருபோதும் அவனை கனப்படுத்த மாட்டார். ஒரு பொய்யையோ அல்லது ஒரு பிசாசையோ தேவன் கனப்படுத்துவார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? ஒரு போதும் இல்லை. செய்தியானது அவர்களுடைய தலைகளுக்கு மேலாக செல்கின்றது. அவர்கள் அதை பெற்றுக் கெள்ளவில்லையென்றால், தேவன் தம்முடைய தெரிந்து கொண்டவர்களை வெளியே இழுத்துவிடுகிறார். 64 காலங்களினூடாகக் கடந்து வந்த தீர்க்கதரிசிகளை கவனியுங்கள் - தாம் தெரிந்து கொண்டவர்களை தேவன் எவ்விதம் கொண்டு வந்தார் என்பதை கவனியுங்கள். சீர்திருத்தக் காலத்தில் ரோமன் கத்தோலிக்க மார்க்கமானது ஜோன் ஆப் ஆர்க் (Joan of Arc) என்னும் பெண்மணியை மந்திரவாதி என்று அழைத்து மரத்தில் கட்டி எரித்தனர். அது நடந்தது உண்மை. ஆனால் சிறிது காலம் கழித்து அவள் அவ்விதம் இல்லை, அவள் ஒரு பரிசுத்தமானவள் என்று அவர்கள் கண்டுபிடித்து அவளைக் கொன்ற குருக்களின் கல்லறைகளை தோண்டி, அவர்களின் எலும்புகளை எடுத்து ஆற்றிலே தூக்கியெறிந்து, இவ்விதமாக தங்களை குற்றமற்றவர்கள் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய செய்கை தேவனுடைய புஸ்தகத்திலுள்ளதை சரி செய்யவில்லையோ பரிசுத்த பாட்ரிக்கையும் அவர்கள் அவ்விதமே அழைத்தார்கள். நான் எவ்விதம் இன்று இருக்கிறேனோ அவ்விதமே அவரும் இருந்தார். அவருடைய பிள்ளைகளையும், அவருடைய இடத்தையும் பாருங்கள். எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை இரத்த சாட்சிகளின் புத்தகத்தின் வாயிலாக பாருங்கள். ஆனால் அவர்களோ அவ்விதமில்லையென்று கூறுகிறார்கள். தேவன் என்ன கூறினாரோ அது சத்தியம் என்று நிரூபிக்கின்றது. “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று வேதம் கூறுகின்றது. 65 இப்பொழுது நாம் காண்பது, இங்கே சில மாதங்களுக்கு முன்பாக, ஒரு நாள் காலையில் நான் வீட்டிற்கு வெளியே நடந்து வருகையில், ஒரு தரிசனம் வந்தது. இத்தனை வருடங்களாக இவைகளையெல்லாம் அறிந்த யாராகிலும், “கர்த்தர் சொல்லுகிறதாவது'' என்று கூற தேவன் என்னை அனுமதித்து, நான் கூறின யாதொன்றாகிலும் நடைபெறாமல் போயிற்று என்று என்னிடம் கூற சவாலுக்கு அழைக்கின்றேன். இது சத்தியம் என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். (சபையார் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி ) இங்கு யாராகிலும் அதற்கு மாறாக பேசக் கூடுமோ? சகோதரன் பிரன்ஹாம் சற்று நிறுத்துகின்றார். (சபையார் அமைதியாக இருக்கின்றனர் - ஆசி) இது உண்மையாயிருக்கிறது, ஐயா. செய்தியாளனைக் குறித்து எந்தவித கவனத்தையும் செலுத்தாதீர்கள்; அவனுடைய செய்திக்கே உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அதுதான் சரியானதாகும். வழுக்கை விழுந்த தலையையுடைய மனிதனை கவனிக்காதீர்கள்; அவன் ஒரு சாதாரண மனித பிறவி தான். நாம் எல்லோரும் ஒரே இனத்தவர் தாம். ஆனால் என்ன சம்பவிக்கிறது என்றும், அதினால் என்ன அறை கூவப்படுகிறது என்றும் கவனியுங்கள். ஜனங்கள் பலவிதமான அனுபவங்களைப் பற்றிக் கூறுகின்றனர். ஆனால் அவைகளில் பெரும்பாலானவைகள் சரியாக இருப்பதில்லை என்று நானறிந்திருக்கிறேன். மற்றொரு மனிதன் என்ன கூறுகிறான் என்பதற்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் என்ன கூறுகிறோனோ அதைக் குறித்து மட்டும் நான் கூறி, அதற்கான பொறுப்பை நானெடுத்துக் கொள்ள வேண்டியவனாயிருக்கின்றேன். யாரையும் என்னால் நியாயந்தீர்க்க முடியாது. நான் யாரையும் குறித்து நியாயத்தீர்ப்பு செய்ய இவ்வுலகிற்கு அனுப்பப்படாமல் செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பப்பட்டேன். 66 கவனியுங்கள், அத்தரிசனத்தில் நான் மணவாட்டி சபையின் முன்னதான தோற்றத்தை (Preview) கண்டேன். நான் காணக்கூடாத ஒருவரால் உயரே எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு ஸ்தானத்தில் நிற்க வைக்கப்பட்டேன். அங்கு இதுவரை நான் கேட்டிராத ஓர் இனிமையான இசையைக் கேட்டேன். இவ்விதமாக நான் அங்கே பார்த்துக் கொண்டிருக்கும்போது 18 வயதிலிருந்து 20 வயது வரை மதிக்கத்தக்க ஒரு கூட்ட சிறு பெண்கள், நீளமான கூந்தலை வைத்துக்கொண்டு, பலவிதமான ஆடைகளை உடுத்துக் கொண்டவர்களாய் (ஒவ்வொரு தேசத்திற்கேற்ப) அந்த இசைக் கேற்ப சற்றேனும் அடி பிறழாமல் அணி வகுத்துச் சென்றனர். அவர்கள் என் இடப்பக்கமிருந்து சுற்றிக் கொண்டு சென்றனர். அவர்கள் செல்வதையே நான் கவனித்துக் கொண்டிருந்தேன். பின்பு நான் என்னோடு பேசுபவர் யார் என்பதைக் காண திரும்பினேன். ஆனால் யாரையும் அங்கு நான் காணவில்லை. பின்பு “ராக்- அண்டு - ரோல்” என்னும் (மேற்கத்திய இசை) இசையின் சத்தத்தைக் கேட்டேன். அதைக் காண நான் திரும்பின போது, என்னுடைய வலது பக்கத்திலிருந்து எனக்குப் பின்புறமாக ஒரு கூட்டமானது வருவதைக் கண்டேன், அது இந்த உலக சபைகளின் கூட்டமாக இருந்தது. அதில் சில பேர் தாங்கள் எந்த தேசத்திலிருந்து வருகிறார்கள் என்பதைக் காட்ட ஒரு பலகையைச் சுமந்து வந்தனர். என்னுடைய வாழ் நாளில் அத்தகைய அசுத்தக் காட்சியை நான் கண்டதில்லை. பின்பு அமெரிக்க தேச சபையானது வந்தபோது, அது மகா அசுத்தமாயிருந்தது. அத்தகைய அசுத்தத்தையும் நான் இதுவரைக் கண்டதில்லை! பரலோகப் பிதாவே எனது நியாயாதிபதியாயிருக்கிறார். அவர்கள் ஒரு விதமான சாம்பல் நிற பாவாடை அணிந்திருந்தனர் (மது நிலையங்களில் பெண்கள் அணிந்திருப்பது போல). அப்பாவாடைக்குப் பின்புறம் என்பது இல்லாமல் ஒரு சாம்பல் நிற காகிதத்தைப் போல் அங்கு ஒட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் தலைமயிரை கத்தரித்தவர்களாயும், வர்ணம் தீட்டினவர்களாயும், புகை பிடித்தவர்களாயும், ஹலா என்னும் ஒருவித நடனத்தை ஆடிக்கொண்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக்கொண்டே அங்கே அணிவகுத்துச் சென்றனர். அப்பொழுது நான், “அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சபையா இது'' என்று வினவினேன். அதற்கு அந்த சத்தமானது, “ஆம், அதுதான்” என்றது. 67 அவர்கள் அங்கே கடந்து சென்றபோது, அந்த காகிதம் என்ற துணியை அவ்வாறு பிடித்துக் கொண்டு தங்கள் பின் பாகத்தை மறைத்துக் கொண்டனர். அப்பொழுது நான் அழ ஆரம்பித்து, “ஓ, என்னுடைய எல்லா உழைப்பும், நான் செய்த எல்லாக் காரியங்களும், ஊழியக்காரராகிய நாங்கள் ஒருமிக்க உழைத்த உழைப்பெல்லாம் வீணாகப் போயிற்றே” என்று எண்ணினேன். சகோதரர்களே, இந்த தரிசனங்களைக் குறித்து நீங்கள் எவ்வளவாய் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நானறியேன். ஆனால் அவைகள் எனக்கு சத்தியமாயிருக்கின்றன; அவைகள் சத்தியம்தான் என்று எப்பொழுதும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. நான் அந்தக் காட்சியைக் கண்டு என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த போது என் இருதயமானது எனக்குள்ளே நொறுங்கினது போல் காணப்பட்டது. ''நான் என்ன செய்தேன், நான் எவ்விதம் உம்மைத் தவறவிட்டேன்? கர்த்தாவே, நான் வார்த்தையிலே ஸ்திரமாக நின்றேனே, நான் எவ்வாறு அவ்விதம் செய்திருக்க முடியும்?ஏன் இத்தகைய ஓர் தரிசனத்தை எனக்கு முன்பே தந்திருக்கக் கூடாது? சரி. அவர்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டுமா?'' என்று நினைத்தேன். அதற்கு அவர், ''பவுலின் கூட்டம் கூட நியாயந்தீர்க்கப்பட வேண்டும் என்றார். அப்பொழுது நான், “பவுல் பிரசங்கித்த அதே வார்த்தையைத்தான் நானும் பிரசங்கித்தேன்'' என்று கூறினேன். கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கம் பத்திரிக்கை அதைக் குறித்த கட்டுரையை கொண்டிருந்தது. நான் மேலும் தொடர்ந்து, ”இந்த சபை ஏன் இவ்விதம் இருக்கின்றது?'' என்று வினவினேன். தன்னை 'செல்வி அமெரிக்கா' என்று அழைத்துக் கொண்ட அச்சபை அந்த விதமான ஆடையணிந்து ஒரு கூட்ட விபச்சாரிகளாய் அங்கே அணிவகுத்துச் சென்றன. நான் இக்காட்சியைக் கண்டதும் மயக்கமுற்றேன். 68 அத்தருணத்தில், அந்த தத்ரூபமான இனிய இசை திரும்பவும் என் காதில் தொனித்தது. நான் முன்பு கண்ட அதே சிறிய மணவாட்டிக் கூட்டம் அங்கே திரும்பவும் வந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவர், ''மணவாட்டியாக வெளி வந்தவர்கள் இவர்கள் தாம்'' என்று கூறினார். அவள் நடந்து வந்தபோது நான் முதலாம் விசை பார்த்தபடியே தேவனுடைய வார்த்தையென்னும் இசைக்கு ஏற்ப அடிபிறழாமல் அவள் நடந்து வந்தாள். அக்காட்சியை நான் கண்ட போது, நான்அங்கு நின்றவனாக என்னுடைய கரங்களை உயர்த்தி அழுது கொண்டிருந்தேன். பின்பு, தரிசனமானது கலைந்த பின்பு, நான் முற்றத்தில் நின்று கொண்டு வயல்வெளியை நோக்கிக் கொண்டிருந்தேன். அது என்ன? அந்த முதலாவது இடத்தில் இருந்தது போலவே வார்த்தையென்னும் அதே சத்துவத்தால் கட்டப்பட்ட ஒரே இனத்தைச் சேர்ந்த மணவாட்டியாகத் தான் அவள் இருக்கவேண்டும். இப்பொழுது மல்கியா 4-ம் அதிகாரத்தைப் படியுங்கள், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கு திருப்பும் கடைசி காலச் செய்தியினை நாம் பெறுவோமானால் - அது வார்த்தைக்கு வார்த்தை மூல பெந்தெகொஸ்தேயின் செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும், சகோதரரே. இந்த சபையானது ஒரு அடையாளத்தைப் பெற வேண்டியிருக்கின்றது. வசனங்களின்படி ஒரு மகத்தான பிரசவ வேதனையானது இந்த லவோதிக்கேயா சபையின் காலத்திற்கு உண்டாகியிருக்கின்றது. இப்பிரசவ வேதனையின்று அவர்கள் சபை மறுபிறப்பை அடைந்துக் கொண்டிருக்கின்றது. 69 வேறொரு ஸ்தாபனம் இனிமேல் உண்டாகப் போவதில்லை. ஒரு செய்தியானது வந்து போன பின்பு, அதிலிருந்து ஒரு ஸ்தாபனமானது வெளி வந்துவிடுகின்றது. ஒவ்வொரு சமயமும் அவ்வாறே இருந்தது. வேண்டுமானால் சரித்திரக்காரர்களைக் கேட்டு பாருங்கள். ஓ! அலெக்சாண்டர் கேம்ப்பெல், மார்டின் லூத்தர் ஆகியோர் வந்துபோன பின்பு, ஜனங்கள் அவைகளை ஸ்தாபனங்களாக்கிவிட்டனர். வழக்கமாக ஒரு எழுப்புதலானது 3 வருடங்கள் தான் கிரியையில் காணப்படும். ஆனால் என்னுடைய ஊழியமோ 15 வருடங்களாக தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருந்தாலும் இதினின்று ஸ்தாபனம் என்று ஒன்று ஏற்படவில்லை. ஏன்? பதரான பெந்தெகொஸ்தே ஸ்தாபனமே முடிவானதாகும். நாம் இப்பொழுது முடிவில் இருக்கின்றோம். இப்பொழுதிருக்கும் கர்ப்ப வேதனையை பாருங்கள் மீதமானவர்களே வெளிக்கொண்டு வரப்படுவர். ஆகவே தான் நான் அவருடைய வார்த்தையின் மேல் உறுதியாக நின்று தேவனிடத்தில் சகாயம் பெறும்படியாக பூமியின் மேலுள்ள மனிதரின் சகாயத்தையெல்லாம் புறம்பே தள்ளி, அழுது கொண்டும், உபத்திரவப்பட்டுக் கொண்டுமிருக்கிறேன். அவள் வேதனையிலிருக்கின்றாள். அதுதான் காரியம். அவள் பிரசவிக்கப் போகிறாள். அவள் தன்னுடைய தெரிந்துக் கொள்ளுதலைச் செய்திட வேண்டும். சுவற்றின் மேல் கையெழுத்தானது எழுதியாகிவிட்டது. இப்பூமியானது ஒழிந்து போகக் கூடிய நிலைமையிலிருக்கிறதை நாம் காண்கிறோம். அது உண்மை. சபையும் பழுதடைந்து அழிந்துப் போகக் கூடிய ஆயத்த நிலைமையிலிருக்கிறாள். உலகத்தின் மேலும் சபையின் மேலும் பிரசவ வேதனையானது பெருகிவிட்டது. ஒரு புதிய உலகமானது பிறக்க வேண்டியதாயிருக்கிறது, புதிய சபையும் பிறந்து அது ஆயிரம் வருட அரசாட்சிக்கு செல்ல வேண்டியதாயுள்ளது, இவைகளை நாம் அறிந்திருக்கிறோம். 70 இப்பொழுது நெருக்கமாக கவனியுங்கள். அவளுடைய முடிவான அடையாளத்தையும், செய்தியையும் நான் கூறப் போகிறேன். அவள் ஆதியில் எவ்வாறு இருந்தாளோ அத்தகைய நிலைமைக்குள் செல்வது தான் அவளுடைய கடைசி அடையாளமாயிருக்கின்றது. உலகமும், சபையும்... ஆதியில் எவ்வாறு இருந்தது என்பதை கவனியுங்கள். மல்கியா தீர்க்கதரிசியின் கால முதல் இயேசு கிறிஸ்து வரும்வரை அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் அருளப்படவில்லை. அச்சமயத்தில் அவள் எத்தகைய விதமாக பழுதடைந்து போனாள் என்பதை கவனித்துப் பாருங்கள், பூமியானது ஒவ்வொரு சமயமும் எவ்வாறிருந்தது என்பதை கவனித்துப் பாருங்கள் - “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரனுடைய நாட்களில் நடக்கும்...'' இதே விதமான வகையிலே இன்றும் காணப்பட வேண்டும். இவைகளெல்லாம் சாயலாக உருவாகிக் கொண்டிருக்கின்றதை நாம் காண்கிறோம். 71 இதைத் தவிர ஒரு முடிவான அடையாளத்தையும் நாம் பெறுகிறோம். லூக்கா எழுதின சுவிசேஷம் 17-ம் அதிகாரம் 28-ம் வசனத்தில் “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரனுடைய வருகையிலும் நடக்கும்'' என்று கூறப் பட்டிருக்கின்றது... கவனிக்கிறீர்களா? இப்பொழுது இயேசு இந்த அதே வேதாகமத்தை படித்தார், அதே ஆதியாகமத்தை நாமும் படிக்கின்றோம். இப்பொழுது கவனியுங்கள். நான் கூறப் போவதை தவறவிடாதீர்கள் நாம் படிக்கின்ற அதே வேதாகமத்தை இயேசுவும் படித்தார். இயேசு தமது சபையைப் பார்த்து, ''சோதோமின் நாட்கள் திரும்ப வருவதை நீங்கள் காணும்போது...'' என்று கூறினார். அப்பொழுது காணப்பட்டது என்ன? ஜனங்கள் தாறுமாறானவர்களாகக் காணப்பட்டு இயற்கையான அமைப்புகளை மாற்றிப்போட்டார்கள்... இன்றைய உலகில் ஆண் புணர்ச்சியானது (Homosexual) எவ்வளவாய் பெருகியிருக்கிறது என்பதை கவனியுங்கள். செய்தித்தாள்களும் அவைகளை வர்ணிக்கின்றன... நீங்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வருவீர்களென்றால் தாய்மார்கள் தங்கள் ஆண் பிள்ளைகளுக்காக எழுதியிருக்கும் அத்தகைய கடிதங்களை உங்களுக்குக் காட்டுவேன். கலிபோர்னியா என்னும் பட்டணத்தில் மட்டும் இத்தகைய ஆண் புணர்ச்சிக்காரர்கள் ஒரே ஒரு வருடத்தில் 20 அல்லது 30 சதவீதம் எண்ணிக்கையில் பெருகியிருக்கிறார்கள். ஒரு பெரியக் கூட்ட அரசாங்கம் அலுவர்கள் கூட ஆண் புணர்ச்சிக்காரர்களாயிருக்கின்றார்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றனர். அரசாங்க பணியாளர் அதை அறிந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் நான் அவைகளைக் குறித்து படிக்கிறேன். இன்னும் பலவிதமான வித்தியாசப்பட்டக் காரியங்களும், நடந்து வருகின்றன. (சபையிலிருந்து யாரோ ஒருவர் அந்நிய பாஷையை பேசி அதற்கு அர்த்தத்தையும் கூறுகிறார்.) 72 வேத வசனங்களைக் குறித்த சரியான புரிந்துக் கொள்ளுதல் எனக்கு உண்டாயிருக்குமானால், தேவன் என்னக் கூறினாரோ அது சரியாக அவ்வாறே சம்பவிக்கும் என்பதே என்னுடைய கருத்தாகும். ''அந்தப்படி அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக் கடவன்'' என்று வேத வசனம் கூறுகின்றது. அது உண்மையே, நான் உங்களுக்கு சத்தியத்தையே கூறியிருக்கிறேன், அதை தேவன் இங்கே இருந்து உறுதிபடுத்துகின்றார். அது தான் சத்தியம். அது உண்மை. கவனியுங்கள், இயேசு கூறின கடைசி செய்தி என்ன? - “லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்'' என்று கூறினார். புறஜாதியின் உலகமானது எரிக்கப்படுவதற்கு சற்று முன்பு என்ன நிகழ்ந்தது? இதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். என்ன சம்பவித்தது?லோத்தைப் போன்று வெது வெதுப்பான சபை அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு கூட்ட ஜனம் அங்கே சோதோமில் உண்டாயிருந்தனர். ஆனால் வேறொரு மனிதன் ஏற்கனவே அதினின்று வெளியே வந்து அதனோடு ஆதி முதலாய் சம்பந்தங்கலவாதவனாயிருந்தான். அவன்தான் ஆபிரகாம். வருகிறதான குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தைப் பெற்றவனும் இவனே. நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்களா? அப்படியானால், ”ஆமென்'' என்று கூறுங்கள், (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நல்லது. இப்பொழுது, அழிவிற்கான உச்சக் கட்ட நிலை வருவதற்கு சற்று முன்னர் தேவன் ஆபிரகாமுக்கு பல வகைகளில் தோன்றினார், ஆனால் இந்த சமயத்தில் ஒரு மனிதனாக அவர் தோன்றுகின்றார். அவர் மனிதனாக இருந்தார். அப்பொழுது அவன் தேவனிடம் வந்தான். “அது ஒரு மனிதனாக இல்லை” என்று நீங்கள் கூறலாம். அது - அது - அது - அது அந்த மனிதனில் இருந்த தேவன்? ஆபிரகாம் அவரை “ஏலோகிம்'' என்று அழைத்தான். அது ஒரு மனிதனே. தம்முடைய முதுகு கூடாரத்திற்கு எதிர் புறமாயிருக்க அங்கே அமர்ந்திருந்து, ''உன் மனைவி சாராள் எங்கே?'' என்றார். ''அதோ உமக்குப் பின்புறமாய் கூடாரத்தில் இருக்கிறாள்'' என்றான். அப்பொழுது அவர், ''நான் உனக்கு வாக்குத்தத்தம் செய்த படி ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமரன் இருப்பான்“ என்றார். அப்பொழுது சாராள் நகைத்தாள். அப்பொழுது அவர், ''சாராள் நகைத்தது என்ன?'' என்று கேட்டார். கவனிக்கிறீர்களா? 73 இச்சம்பவம் தான் அந்த நாளிலே நடந்து கொண்டிருந்தது. ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளத்தைப் பாருங்கள். (சோதோமிலிருந்து தெரிந்துக் கெள்ளப்பட்டவர்கள் அச்சமயத்தில் வெளியேயிழுக்கப்பட்டனர்) - இந்த உவமையை இப்பொழுது கவனிக்க தவறிவிடாதீர்கள். வெளியே எடுக்கப்பட்டவர்களாகிய அந்த கூட்டமானது ஆதி முதலாய் சோதோமை சேர்ந்தவர்களாயிருக்கவில்லை. அந்த இரண்டு தூதர்கள் சோதோமிற்குச் சென்றபோது அங்கே ஆண் புணர்ச்சிக்காரர்களின் மத்தியிலும், தாறுமாறானவர்களின் மத்தியிலும் இந்த லோத்து என்பவன் பின்மாற்றமுள்ளவனாக சிக்கிக் கொண்டிருந்தான் என்பதை நாம் காண்கிறோம். அந்த வர்த்தமானத்தை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆபிரகாமோடு ஒருவர் தங்கியிருந்தார். அவர்தான் ஏலோகிம். அவர்கள் அங்கே வார்த்தையை பிரசங்கித்தனர். வார்த்தையை பிரசங்கித்தல் அவர்களை குருடாக்கினது, ஆதலால் அவர்களால் வாசல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாமற் போயிற்று. அது தான் இன்றைக்கும் சம்பவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏற்கனவே வெளி கொண்டு வரப்பட்டு, சோதோமோடு சம்பந்தங் கலவாத ஒரு கூட்டமாகிய ஆபிரகாமின் முன்பு தாம் யார் என்பதை காண்பிக்க அற்புதமானது நிகழ்த்திக் காட்டப்பட்டது, அவர் தம்மை யார் என்று அவனுக்கு வெளிப்படுத்தினார். “சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று அவர் கேட்டார். (குழந்தையைப் பற்றியக் காரியம்) சாராள் அங்கு வந்து அதை மறுதலித்தாள். அதற்கு அவர், ''இல்லை, நீ நகைத்தாய்'' என்றார். அவள் ஆபிரகாமின் ஒரு பாகமாயில்லாதிருந்தாளென்றால், அவர் அவளை சரியாக அதே இடத்திலே கொன்று போட்டிருப்பார். அது போலவே நாம் கிறிஸ்துவின் ஒரு பாகமாக இல்லையென்றால் நம்மையும் அழித்துப் போடுவார். வார்த்தையின் பேரில் சந்தேகிக்கிறவர்களாக, தாறுமாறாக இருக்கிறவர்களாகிய நம்மை, தேவ கிருபை தான் கூட்டி காத்து வருகின்றது. 74 கவனியுங்கள், என்ன சம்பவித்தது? “லோத்தினுடைய நாட்களில் நடந்தது போல கடைசி காலத்தில் மனுஷ குமாரன் தம்மை வெளிப்படுத்த ஆரம்பிக்கையிலும் அப்படியே நடக்கும்'' என்று இயேசு திரும்பிப் பார்த்து இப்பொழுது கூறுகிறார். வேதாகமத்தில் மனுஷ குமாரன் என்ற சொல் எப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசிசையே குறிக்கிறதாயிருக்கின்றது. அவர் 'மூன்று குமாரர்' என்ற நாமங்களில் வருகிறவராயிருக்கிறார்; அவையாவன: மனுஷகுமாரன், தேவகுமாரன், தாவீதின் குமாரன் என்பதே. மனுஷகுமாரன் என்று அவர் அறிவித்த காரணம் அவர் ஒரு முன்னுரைப்பவர், தீர்க்கதரிசியின் ஊழியத்தை செய்ததேயாகும். அவர், ''நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்த ஆரம்பிக்கையிலும் நடக்கும், அதுவே முடிவு காலமாக இருக்கும்'' என்று கூறினார். 75 இப்பொழுது நாம் ஒரு நிமிடத்திற்கு சிந்திப்போம். உலகமானது தனக்காக ஒரு செய்தியாளனை உடையதாக இல்லை சார்லஸ் ஃபின்னி, சாங்கி, மூடி, கால்வின் போன்ற தூதுவர்கள், சபையின் பிரசவ வேதனையின் போது இவ்வுலகத்தில் தோன்றினார்கள். ஆனால் ஹாம் என்று முடிகிற எழுத்துக்களுக்குள்ள சர்வதேச செய்தியுடன் செல்கின்ற ஒரு மனிதனை நாம் இன்றுவரை நாம் பெற்றிருக்கவில்லை. ஆபிரகாம் - இது ஏழு எழுத்துக்கள் கொண்டாதாயிருக்கிறது.(ஆங்கிலத்தில் A-B-R-A-H-A-M- 7 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்கின்றது). இன்றைக்கு நாம் கிரஹாம் என்னும் பெயர் கொண்டிருக்கின்ற ஒருவரை கொண்டிருக்கிறோம் கிரகாம்- (இது 6 எழுத்துக்களைக் கொண்டதாயிருக்கிறது) ஆங்கிலத்தில் G-R-A-H- A-M - தமிழில் இவ்விரண்டு எழுத்தின் எண்ணிக்கையில் வித்தியாசப்படுகின்றன. ஆறு என்ற எண் உலகத்தைக் குறிக்கிறதாயிருக்கின்றது. “மனந்திரும்பு மனந்திரும்பு! அழிந்துவிடு அல்லது வெளியே வா!” என்று இந்த காலத்தில் உலகமெங்கும் சுற்றி பிரசங்கித்த இந்த மனிதனைப் போன்று எந்த சபையின் காலத்தில் காணப்பட்டது? கிரகாம் என்பவர் செய்துக் கொண்டிருக்கிற ஊழியத்தை கவனியுங்கள். “வெளியே வா” என்று வார்த்தையை பிரசங்கித்து, வெளியிலிருப்பவர்களை குருடாக்கிக் கொண்டிருக்கிறார். மனுஷகுமாரன் வெளிப்படுவதற்கு சற்று முன்பு அது சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். இப்பொழுது கவனியுங்கள். அது எங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வெளியிலிருக்கும் ஸ்தாபன சபைகளிலே அது நடந்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அவர்கள் அந்த மனிதனை வெறுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். 76 ஆனால் ஒரு கூட்டமான ஆவிக்குரிய யாக்கோபு அங்கிருக்கின்றான். அவர்கள் ஏசாவின் கூட்டமல்ல; அங்கே ஒரு யாக்கோபின் கூட்டம் பாபிலோனில் இல்லாத குமாரனுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு செய்தியாளனைப் பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? (A-B- R-A-H-A-M) ஆபிரகாம் - அவர்கள் ஒரு தூதனைப் பெற்றுக் கொண்டார்கள்... கடைசி மணிநேரத்தில் அந்த சிறிய கூட்டத்திற்குள் தேவ ஆவியானவர் வந்து தம்மை அவ்விதமே வெளிப்படுத்துவார் என்பதை மாம்சமான தேவ குமாரனாகிய இயேசு நமக்கு அறிவித்திருக்கிறார். பிரசவ வேதனைகள், ஓ சகோதரர்களே, புரிந்து கொள்ள முயற்சியுங்கள். கடினமாக முயற்சியுங்கள். கிறிஸ்துவுக்கென்று உங்கள் இருதயங்களை சற்று நேரம் திறவுங்கள். அதே தேவன் இதோ இங்கிருக்கிறார். அந்த அதே ஒருவர் இத்தகையக் காரியங்களை அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவைகளை அவர் வாக்குத்தத்தம் செய்திருப்பாரென்றால் அதை நிறைவேற்றவும் அவரால் கூடும். நமது தலைகளை சற்று வணங்குவோமாக. நீங்கள் அமைதியாக இதைக் குறித்து தியானிக்க நான் விரும்புகிறேன். 77 பிதாவே, என்னால் முடிந்த வரை நான் செய்துவிட்டேன். மற்றவைகள் உம்முடைய கரங்களில் இப்பொழுதிருக்கின்றது. ஜனங்கள் புரிந்துக் கொள்ள நீர் உதவிச் செய்யும். விதையானது விதைக்கப்பட்டாயிற்று; ஜலத்தையும், ஆவியையும் அதன் மேல் ஊற்றும். கர்த்தாவே, உம்முடைய மகிமைக்கென்று அதற்கு நீர் பாய்ச்சும். கர்த்தாவே, நான் ஏதாகிலும் தவறு செய்திருப்பேனென்றால், நான் அவ்விதமாக நோக்கங் கொண்டு அதை செய்யவில்லை. தேவனே, அவர்கள் அதை புரிந்துக் கொண்டு காணத்தக்கதாக அவர்கள் இருதயங்களில் அதை விளக்கியருளும் அருளிச் செய்யும். கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை நேசிக்கிறேன். வார்த்தையை பிரசங்கித்த இந்த தேவன், அவருடைய வார்த்தைக்கு உத்திரவாதமானவராயிருக்கிறார். அதை வாயினால் கூற மட்டும் நான் உத்திரவாதமுள்ளவனாயிருக்கிறேன்; அவர் மட்டுமே அதை உயிர்ப்பிக்கச் செய்கிறவராயிருக்கிறார். அந்த மாறாத தேவன் இங்கிருக்கிறார். உங்களில் எத்தனைபேர் தேவையுள்ளவர்களாயிருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கடைசி நாட்களில் இக்காரியங்களை செய்ய அவர் செய்வதாக வாக்குரைத்திருக்கிறாரா? பேதுருவும், யோவானும், ''எங்களை நோக்கிப் பார்“ என்றார்கள் ''இந்த...'' பாருங்கள், அவன் அவனிடம் கூறினான். இப்பொழுது நீங்கள் இந்த இடமாக நோக்கிப் பாருங்கள். அங்குமிங்கும் அசையாதீர்கள். என்னுடைய முழு இருதயத்தாலும் நான் பக்தியுள்ளவனாயிருக்க முயற்சி செய்கிறேன். கவனியுங்கள், ஜனங்களுடைய விசுவாசத்தைப் பிடிக்கத்தக்கதாக நான் இப்பொழுது முயற்சிக்கிறேன். ஒரு சிறிய பெண்மணி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டுவிட்டு பின்பு போய் அமர்ந்துவிட்டாள். அவளுடைய உபத்திரவம் என்னவென்று இயேசு கூறினார், அவள் சொஸ்தமடைந்தாள், அவர் சோதோமில் செய்தது போல மனுஷ குமாரன் தம்மை தாமே வெளிப்படுத்துவார், அவர் அதை மறுபடியும் செய்யப் போவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இந்த உலகமானது அந்நிலையிலே உள்ளது. சபை அந்நிலையிலுள்ளது. தேவன் தமது வார்த்தையைக் காத்துக் கொண்டாரா? அவர் அதைச் செய்தாரா அல்லது இல்லையா என்பதைப் பாருங்கள்? ஓ, நாம் குதித்தல், அந்நியபாஷைகள் பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் இன்னும் இவை போன்ற அடையாளங்களைப் பெற்றுள்ளோம். ஆனால் பாருங்கள், வேறொரு அடையாளமும் உண்டு. ஓ! மாம்ச பிரகாரமான போலி அடையாளங்கள் அனேகம் நம்மிடையே உண்டு. ஆனால் அவைகள் உண்மையான அடையாளத்தைப் பிரகாசிக்கச் செய்துவிடும். கள்ள நாணயமானது உண்மையான நாணயத்தை பிரகாசிக்கக் செய்துவிடும். 78 விசுவாசித்து ஜெபியுங்கள். அவ்விதம் செய்யும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். நான் கூறியபடி நீங்கள் கவனித்து விசுவாசியுங்கள். இது சத்தியம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்- ஆசி) நீ யாராயிருந்தாலும் நீ எங்கிருந்தாலும் பரவாயில்லை. நான்... பில் டௌ என்பவரும் அவரது மனைவியும் தவிர மற்ற எல்லோரும் எனக்கு முகமறியாதவர்களாயிருக்கின்றனர். ஜெர்மனியிலிருந்து வந்துள்ள இந்த சிறு பிரசங்கியையும், இரண்டு மூன்று பேரையுமே நான் இங்கு அறிந்திருக்கிறேன். அங்கே கூட்டத்தின் கடைசியில் இருக்கும் ஒருவர், பாருங்கள், அங்கே பின் வரிசையில் இருப்பவர். நான் கூறினது சத்தியம் தான் என்று நீங்கள் விசுவாசிக்க நான் உங்களை சவாலுக்கழைக்கிறேன். வருடங்களுக்கு முன்பு, அங்கே அந்த ஆற்றங்கரையிலே தேவ தூதனானவர் கூறின அறிக்கையைப் பற்றிய காரியம் என்ன? என்னுடைய பாப்டிஸ்டு சபை போதகர் என்னைப் பார்த்து, “பில்லி, நீ ஏதோ ஒரு தீய சொப்பனம் கண்டிருக்கிறாய்” என்று என்னிடம் கூறினபோது, இன்றைக்கு தேவன் இப்படிப்பட்டதான காரியங்களையெல்லாம் செய்வார் என்பதை நான் எவ்விதம் அன்று அறிந்திருக்கக்கூடும்? அப்பொழுது நான்அவரைப் பார்த்து, “டாக்டர் டேவிஸ் ஐயாஅவர்களே, நான் தீய சொப்பனம்ஏதும் காணவில்லை. நான் கூறினதை அவ்விதமாகநீர் நினைப்பீரென்றால், என்னுடைய ஐக்கியச் சீட்டையும் எடுத்துக் கொள்ளும்'' என்று கூறினேன். எங்காகிலும் உள்ள ஜனங்கள் இதை விசுவாசிப்பார்கள் என்று நானறிந்திருந்தேன். பெற்றுக் கொள்ளத்தக்க ஒன்றுமில்லாமல் தேவன் ஒருபோதும் தமது செய்தியை அனுப்பமாட்டார். நான் வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்ய சென்றபோது காரியங்கள் மிக நன்றாக இருந்தது. ஆனால் வார்த்தையைக் குறித்த சத்தியத்தை உங்களுக்கு நான் சொன்னபோது காரியங்கள் வித்தியாசமாயின. ஒவ்வொரு செய்தியும் அவ்விதமாகத்தான்இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும். 79 இயேசு சபைக்குச் சென்று ஜனங்களை சுகமாக்கினவரை காரியம் அற்புதமானதாக இருந்தது. ஆனால் ஒரு நாளில் அவர் அங்கு அமர்ந்து, ''நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம், மனுஷ குமாரனுடைய மாம்சத்தை புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்னாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை'' என்று கூறி அதற்கு வியாக்கியானம் ஏதும் கூறவில்லை. தன் பக்கமாக யார் நிற்பார் என்பதையறியவே அவர் அவ்விதம் செய்தார். மருத்துவர்கள் மற்றும் பெரிய மேதைகள் அடங்கிய அந்தக் கூட்டம் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? “இவன் என்ன இரத்தம் உறிஞ்சும் பூதமாக இருப்பானா? இவனுடைய மாம்சத்தை புசித்து இரத்தத்தைக் குடிக்க வேண்டுமாம்'' என்று கூறியிருப்பார்கள். அவர் அதை விளக்கவில்லை. அவர் அதை விளக்கிக் கூறவில்லை இருந்தாலும் அந்த வார்த்தையானது அப்போஸ்தலர்களை தக்க வைத்துக் கொண்டது. அவர்களுக்கு அது புரியாவிட்டாலும் அதைக் குறித்து அவர்கள் கவலைக் கொள்ளவில்லை. அதை அவ்விதமே விசுவாசித்தார்கள். தேவனுடைய கிரியைகளை அவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் அவ்விதம் காணப்பட்டனர். ''என்னைக் குறித்து சாட்சியிடுகிறவைகள் அவைகளே” என்று இயேசு கூறினார். 80 இங்கே ஒரு மனிதன், பெண் அமர்ந்திருக்கிறார்கள், தன் கையை உயர்த்தியுள்ளார்கள். நீங்கள் விரும்பினால் என்னை பயித்தியக்காரன் என்று அழைக்கலாம். ஆனால் வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் இதோ இங்கிருக்கும் அந்த பெண்மணியின் மேல் காணப்படுகின்றது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். இயேசு, “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். திரும்பவும் தேவனிடத்திற்கே போகிறேன்'' என்று கூறினார். அவருடைய மரணம், அடக்கத்திற்குப் பிறகு அவர் யூதர்களிடம் கூறினார், ''நான்...'' அவரே அந்த அக்கினி ஸ்தம்பமும் வனாந்தரத்தில் காணப்பட்ட கன்மலையுமானவர். ''இருக்கிறவராக இருக்கிறேன்'' என்றவர் யார்? எரியும் முட்புதரில் காணப்பட்டவர்தானே? அவரே மாம்சமாகி நமது மத்தியில் வாசம் செய்தார். பரிசுத்த ஆவியாயிருந்த நிலைக்கு தாம் திரும்புவதை குறிக்கவே அவர், ”நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன், திரும்பவும் தேவனிடத்திற்கே போகிறேன்“ என்றார். அதே தேவன் இதோ மத்தியிலே இன்றிருக்கிறார். விஞ்ஞானமும் அவரைப் படம் எடுத்தது. விஞ்ஞானப் படத்தின் நிரூபத்திற்கு மேலாக அவர் இதோ இங்கே நிரூபிக்கத்தக்கவராக இருக்கிறார். இந்த நாளுக்கென்று வெளிப்படும் மனுஷகுமாரன் நான் தான். இப்பொழுது, அதோ அங்கே அவர் இருக்கிறார். நான் சரியாக அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ”நீங்கள் அவரைக் காண்கிறீரா?“ என்று நீங்கள் கேட்கலாம். யோவான் அவரைக் கண்டான். ஆனால் மற்றவர்களோ அவரைக் காண முடியவில்லை. 81 கவனியுங்கள். இப்பொழுது நிரூபணமானது நடைபெறப் போகிறது. அந்த பெண்மணி எனக்கு முகமறியாதவர். நான் அவளை ஜீவியத்தில் ஒருபோதும் பார்த்ததில்லை, அவள் தன்னுடைய கால்களிலுள்ள ஒரு உபத்திரவத்திற்க்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். அது உண்மையா பெண்ணே! ஒரு அறுவைச் சிகிச்சையும் உனக்கு நடைபெற்றது. உன் அருகில் அமர்ந்திருப்பவர் உன் கணவர். நீ இப்பட்டினத்தை சேர்ந்தவள் அல்ல, நீ கலிபோர்னியா என்ற இடத்தைச் சேர்ந்தவள், உன்னுடைய பெயர் ரோலண்ட், உன்னுடைய கால் உபத்திரவத்தினின்று நீ சொஸ்தமாக்கப்பட்டாய், அது மட்டுமல்ல, உனக்கிருந்த வயிற்று உபத்திரவமும் இன்றோடு தீர்ந்துவிட்டது. “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.'' இதோ, இங்கே ஒரு நீக்ரோ மனிதன் அமர்ந்திருக்கிறார். அவருடைய கண்களில் ஏதோ உபத்திரவம் உண்டாயிருக்கிறது. கார்களுக்கு வர்ண மெருகேற்றும் தொழிலை அவர் செய்து கொண்டிருக்கிறார். உம்முடைய கண்கள் மோசமாகிக் கொண் டிருக்கின்றன. நீர் இப்பொழுது விசுவாசித்திருக்கிறீர். அப்படித் தானே! ஏதோ ஒரு வித்தியாசமான காரியம் உமக்கு நிகழ்ந்திருக்கிறது, உம்முடைய முதல் பெயர் ஃபிரட் (Fred). அது உண்மை. உம்முயை கடைசி பெயர் காண் (Conn). அது உண்மையா? நீர் இப்பொழுது விசுவாசிக்கிறீரா? இனியும் உம்டைய கண்கள் உமக்கு உபத்திரவம் கொடுக்காது. ஓ... அந்த மனிதனை என் ஜீவியத்தில் ஒருபோதும் பார்த்ததில்லை...? 82 அதோ அங்கே அமர்ந்திருக்கும் மனுஷன் கலிபோர்னியாவை சேர்ந்தவர். ஐயா, உமக்கு மோசமான முதுகுவலி இருக்கிறதல்லவா? உம் பெயர் ஓவன்ஸ் (Owens) உண்மையா? கர்த்தராகிய இயேசு உம்மை சுகமாக்கினார். அந்த மனிதனை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டறியேன். அவரைப் பற்றியும் ஒன்றும் அறியாதனாயிருந்தேன். ஒளியானது எங்கு செல்கின்றதோ அதை நான் தொடருகிறேன். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் நீங்கள் விசுவாசித்தால் யாவும் கைகூடும். இங்கு ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான் - அவன் குடற்பிதுக்க (Hernia) வியாதியினால் கஷ்டப்படுகிறான். அவன் சாம்பல் நிறமுள்ள உடையையும் கண்ணாடியும் அணிந்துக் கொண்டிருக்கிறான். ஃபிரட் (Fred), நீ விசுவாசித்தால் தேவன் உன்னை சுகமாக்குகிறார். நீ அதை ஏற்றுக் கொள்கிறாயா? நான் அவனை என் ஜீவியத்தில் ஒருபோதும் கண்டறியேன். அவனுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருக்கும் திருமதி. ஹோல்டன் (Mrs. Holden) அவர்களே, நீங்கள் கண் வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் விசுவாசித்தால் சுகமடைவீர்கள். நான் அந்த பெண்ணை இதுவரை கண்டதேயில்லை. சகோதரியே, எதற்காக நீ அழவேண்டும்? உனக்கு நரம்புத்தளர்ச்சியும், சளித்தொந்திரவும், இருதயக் கோளாறும் இருக்கின்றன. தேவன் உன்னை சுகப்படுத்தவார் என்று விசுவாசிக்கிறாயா? உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உன்னை சொஸ்தமாக்குவார். அந்த நரம்பு தளர்ச்சிகளெல்லாம் உன்னை விட்டு கடந்து சென்று நீ பழைய சரியான நிலைமைக்கு கொண்டு வரப்படுவாய். பிசாசு உன்னிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான். நீ அதை ஏற்றுக் கொள்கிறாயா? உன்னுடைய கரங்களை இப்பொழுது உயர்த்தி, “நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறு. சரி, உன்னுடைய உபத்திரவங்கள் முடிவடைந்தது. 83 என்ன? இந்த சபையானது பிரசவ வேதனையினூடாக சென்று கொண்டிருக்கிறது. அவருடைய சமூகத்தில் உங்களுடைய தீர்மானத்தை எடுக்க மாட்டீர்களா? அவர் எதை செய்வார் என்று சொன்னாரோ - அந்த வார்த்தையே சரியாக நான் உங்களுக்கு காண்பித்தேன். இந்த கட்டிடம் முழுவதும், இங்கு சுகமாக்கப்பட்டவர்களை அணுகி அலசி ஆராய்ந்து பாருங்கள். அவர்களை நான் எப்போதாவது பார்த்திருக்கிறேனாவென்றும், அவர்களோடு எப்போதாவது பேசியிருக்கிறேனாவென்றும் ஆராய்ந்து பாருங்கள். ஒரு மனிதன் அத்தகையக் காரியம் செய்யக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவ்விதமாகச் செய்வது கூடாத ஒன்று. ஆனால் அதுஎன்ன? மனுஷ குமாரனுடைய ஊழியம். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையுைம் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று வேதம் கூறுகிறது. தேவகுமாரன் மாம்சமான போது எவ்வித கிரியை காணப்பட்டதோ அதேவிதமாக சரியாக இப்பொழுதும் மனுஷ குமாரனுடைய ஊழியத்திலும் காணப்பட்டு மணவாட்டியை ஸ்தாபன அமைப்பினின்று வெளிக் கொண்டுவர அழைக்கின்றது. ''பிரிந்து வெளியே வாருங்கள்! நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன். உங்களுடைய முழு ஜீவியத்தையும் தேவனுக்கு ஒப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் எழுந்து நின்று, ''எல்லாம் முடிவுற்றபடியினால், தேவனுடைய கிருபையினால் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறுங்கள். 84 அல்லேலூயா தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி) அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்தி என்னோடு ஜெபம் செய்யுங்கள். உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுங்கள். பிரசவ வேதனை - மரிப்பது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் இப்பொழுதே மரியுங்கள் உங்களுடைய சொந்த அவிசுவாசத்தினின்று வெளியே வாருங்கள். இயேசு பூமியில் வந்தபோது காணப்பட்டது போல, வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை இதுதான்; இயேசு கிறிஸ்து திரும்பவும் உங்கள் மத்தியில் நிரூபணமாக இருக்கிறார். அது சம்பவித்த பின்பு உடனே தானே ஆபிரகாம் ஒரு குமாரனை பெற்றுக் கொண்டான்.(வாக்குத்தத்தம் செய்யப்பட குமாரன்). இயேசு திரும்பவும் வருகிறார். அது அவருடைய ஆவியே. அவர் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கிறார், தம்முடைய வருகைக்கு மிகவும் சமீபமாயிருந்து, நீ அவரை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தால் அவரும் உன்னை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார். இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி என்னோடு ஜெபம் செய்யுங்கள். 85 தேவனாகிய கர்த்தாவே, பீடத்தினண்டையில் எல்லா போதகர்களும் தங்கி நிற்கட்டும். ஜனங்கள் கதறியழட்டும். ஜீவிக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனின் சமூகத்திலே, கர்த்தாவே, அக்கினி ஸ்தம்பமும், மேகஸ்தம்பமும் ஜனங்களிடையே அசைவாடி இன்று அவர்களுக்கு உணர்வையும் மனத் தெளிவையும் கொடுக்கட்டும். இதை அருளிச் செய்யும், கர்த்தாவே. அவர்களை ஏற்றுக் கொள்ளும். இந்த ஜெபத்தை நான் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியைப் பெறாதவர்கள் ஒவ்வொருவரையும் நிரப்பும். கர்த்தாவே, இந்த எழுப்புதலானது பரிசுத்த ஆவியின் ஒரு மகத்தான வழிந்தோடுதலாக பாயச் செய்யும். வியாதியுள்ளோர் சுகமாகட்டும், குருடர் காணட்டும், முடவர் நடக்கட்டும். இந்த மதிய நேரத்தில் நிகழ்ந்தது போல, ஜீவிக்கிற தேவனுடைய வெளிப்பாடு ஜனங்களுடைய சமூகத்தில் இன்றிரவும் கொண்டு வரப்பட்டு, ஜனங்கள் அதை பெற்றுக் கொள்ளப்படும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இவைகளை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கரங்களை உயர்த்தி அவரை ஸ்தோத்தரித்து நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதை பெற்றுக் கொள்ளுங்கள்...